செய்திகள்
எடியூரப்பா

உரிய ஆதாரம் இல்லாமல் ரூ.2,000 கோடி முறைகேடு குற்றச்சாட்டை கூறியது தவறு: எடியூரப்பா

Published On 2020-07-27 03:21 GMT   |   Update On 2020-07-27 03:21 GMT
உரிய ஆதாரம் இல்லாமல் ரூ.2,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டை கூறியது தவறு என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரு :

முதல்-மந்திரி எடியூரப்பா பதவி ஏற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அவர் ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

முன்னேற்ற வேண்டும்

பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா மேலிட தலைவர்களின் ஆதரவு இருக்கும் வரை நான் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பேன். இன்னும் 3 ஆண்டுகள் பதவி காலம் உள்ளது. இதில் நான் சிறப்பாக செயல்பட பிரதமர் மோடி எனக்கு முழு அதிகாரம் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என் பக்கம் உள்ளனர். கர்நாடகத்தை முன்னேற்ற வேண்டும் என்பது எனது இலக்கு. எந்த ஒரு அரசியல் தலைவரும் திருப்தி ஏற்பட்டுவிட்டது என்று நினைக்கக்கூடாது. அரசியல்வாதிகள் எவ்வளவு பணிகளை செய்தாலும், அது குறைவே.

நான் முதல்-மந்திரி பதவி ஏற்ற பிறகு பெரு வெள்ளம் உண்டானது. அதை மத்திய அரசின் உதவியுடன் சிறப்பான முறையில் நிர்வகித்தேன். அதன் பிறகு 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தது. அதில் வெற்றி பெற்றோம். நான் இந்த வயதிலும் ஓய்வின்றி உழைத்து வருகிறேன். ஓய்வு எடுத்தால் எனது உடல்நிலை பாதிக்கும். 40, 45 ஆண்டுகளாக மக்களிடையே இருந்து மக்கள் பணியாற்றி வருகிறேன்.

கொரோனா பரவி தொடங்கிய பிறகும் நான் ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறேன். ரொம்ப கடினம், நான் ஏன் இந்த பதவிக்கு வந்தேன் என்று ஒரு நாளும் கருதியது இல்லை. அவ்வாறு கருதவும் கூடாது. நான் 6 கோடி கன்னட மக்களை முன்னேற்ற பாடுபட்டு வருகிறேன். எனது கடைசி நாள் வரை மக்களிடையே இருப்பேன். வளர்ச்சிக்காக உழைப்பேன். மந்திரிகள் சரியாக ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என்று கூறுவது தவறு.

மந்திரிகள் எனது எதிர்பார்ப்பை மீறி நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். அவர் முறைகேடு குற்றச்சாட்டை கூறும்போது, உரிய ஆதாரங்களை வெளியிட வேண்டும். கொரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இத்தகைய குற்றச்சாட்டுகளை கூறுவதால், அதிகாரிகள் மனதளவில் சோர்வடைவார்கள். உரிய ஆதாரம் இல்லாமல் ரூ.2 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டியது முற்றிலும் தவறு.

கொரோனாவை தடுக்க கர்நாடக அரசு எடுத்த நடவடிக்கைகளை பிரதமர் பாராட்டினார். இப்போது பெங்களூருவில் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. சவால்களை எதிர்கொண்டு கர்நாடக மக்களை நிம்மதியாக வாழ வைப்பதே ஒரு உண்மையான தலைவரின் தலைமை குணம். சில மாநிலங்கள் அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளது. ஆனால் நாங்கள் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பைசா கூட குறைக்காமல் வழங்கி வருகிறோம். கடன் வாங்கியாவது அரசு அறிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்துவோம்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Tags:    

Similar News