செய்திகள்
விமான சேவை

உள்நாட்டு விமானங்களுக்கான கட்டண வரம்பு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

Published On 2020-07-24 17:13 GMT   |   Update On 2020-07-24 17:13 GMT
உள்நாட்டு விமானங்களில், பயண நேர அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண வரம்பு நவம்பர் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் ஊரடங்கால் முடக்கப்பட்டிருந்த விமான சேவை, 2 மாதங்களுக்கு பிறகு கடந்த மே மாதம் 25-ம் தேதி தொடங்கியது. முதலில் உள்நாட்டு விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விமானங்களை இயக்குவதற்கு பயண நேர அடிப்படையில் 7 வகைகளாக வழித்தடங்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு விமானத்திலும் 40 விழுக்காடு டிக்கெட்டுகளை நடுத்தர கட்டணத்திற்கு குறைவான விலையில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது.

இதன்மூலம், டிக்கெட்டுகளின் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பயணக் கட்டண வரம்பு ஆகஸ்ட் 24 வரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 

தற்போது கொரோனா தாக்கம் குறையாத நிலையில், இந்த கட்டண வரம்பு மேலும் 3 மாதங்களுக்கு, அதாவது நவம்பர் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த கட்டண வரம்பின்படி, 40 நிமிடத்திற்கு குறைவான பயண நேரத்திற்கு குறைந்தபட்சமாக 2 ஆயிரம் ரூபாயாகவும், அதிகபட்சமாக 6 ஆயிரம் ரூபாயாகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

40 முதல் 60 நிமிடங்கள் பயண நேரத்திற்கு குறைந்தபட்சமாக 2 ஆயிரத்து 500 ரூபாயும், அதிகபட்சமாக 7 ஆயிரத்து 500 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

60 முதல் 90 நிமிட பயணங்களுக்கு குறைந்தபட்சமாக 3 ஆயிரம் ரூபாயும், அதிகபட்சமாக 9 ஆயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

90 முதல் 120 நிமிட பயணங்களுக்கு குறைந்தபட்சமாக 3 ஆயிரத்து 500 ரூபாயும், அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாயும் விமானக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.120 முதல் 150 நிமிட பயணங்களுக்கு குறைந்தபட்சமாக 4 ஆயிரத்து 500 ரூபாயும், அதிகபட்சமாக 13 ஆயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

150 முதல் 180 நிமிடங்களுக்குட்பட்ட பயண நேரத்திற்கு குறைந்தபட்சமாக 5 ஆயிரத்து 500 ரூபாயும், அதிகபட்சமாக 15 ஆயிரத்து 700 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும்.

180 முதல் 210 நிமிடங்களில் சென்றடைய கூடிய கோவை - டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு குறைந்தபட்சமாக 6 ஆயிரத்து 500 ரூபாயும், அதிகபட்சமாக 18 ஆயிரத்து 600 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News