செய்திகள்
தேவகவுடா

கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்: தேவகவுடா

Published On 2020-07-14 03:15 GMT   |   Update On 2020-07-14 03:15 GMT
கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று தேவகவுடா வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு :

ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வருகிறது. இதை தடுக்க கர்நாடக அரசு, பெங்களூரு நகர் மற்றும் பெங்களூரு புறநகர் மாவட்டங்களில் ஒரு வாரம் ஊரடங்கை அமல்படுத்தி இருப்பதை நான் வரவேற்கிறேன். அத்துடன் கர்நாடகம் முழுவதும் இந்த ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்.

மக்களின் உடல் நலம் மிக முக்கியம். அதனால் வீட்டை வெளியே செல்பவர்கள், முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித விலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை சானிடைசர் திரவம் மற்றும் சோப்பு போட்டு தூய்மைபடுத்தி கொள்ள வேண்டும். முக்கியமான பணிகள் இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள்.

கொரோனா வைரஸ் பரவலால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா தொகுப்பு உதவி திட்டத்தை அறிவித்தார். அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். அதுகுறித்து சட்டசபை கூட்டத்தில் பிரச்சினை கிளப்பலாம். தற்போது மக்களின் உடல் ஆரோக்கியம் தான் முக்கியம்.

மாநில அரசும் இந்த நோக்கத்தில் பணியாற்ற வேண்டும். நாங்கள் அரசுக்கு பக்க பலமாக இருக்கிறோம். மக்களின் உடல் ஆரோக்கியத்தில் யாரும் விளையாட வேண்டாம். இனிமேலாவது விழிப்படைந்து பணியாற்றுங்கள்.

இவ்வாறு தேவகவுடா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News