செய்திகள்
மத்திய மந்திரி நிதின் கட்கரி

நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது - நிதின் கட்கரி

Published On 2020-07-01 13:26 GMT   |   Update On 2020-07-01 13:26 GMT
நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க இந்தியா அனுமதிக்காது என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே கடந்த 15-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 

இதையடுத்து, சீனாவின் அராஜகத்தைக் கண்டிக்கும் விதமாக சீனாவில் தயாராகும் செயலிகள் எதையும் பயன்படுத்தக்கூடாது. சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷமும் இந்தியாவில் எழுந்து வருகிறது. 

இந்நிலையில், நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க இந்தியா அனுமதிக்காது என மத்திய நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்தியாவில் சாலை கட்டுமான பணிகளில் கூட்டு திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது. இதற்காக மத்திய அரசு உறுதியான முடிவை எடுத்துள்ளது.

நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்களை தடை செய்யவும், இந்திய நிறுவனங்களுக்கு விதிகளை தளர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட சில திட்டங்களில் சீன நிறுவனங்கள் இருந்தாலும், இனி வரும் காலங்களில் அதற்கு தடை விதிக்கப்படும். தொழில்நுட்பம், ஆலோசனை மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் கூட்டுத் திட்டமாக இருந்தாலும், சீன நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

Similar News