செய்திகள்
ராஜ்நாத் சிங்

3 நாள் பயணமாக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ரஷியா சென்றார்

Published On 2020-06-23 03:33 GMT   |   Update On 2020-06-23 03:33 GMT
3 நாள் அரசுமுறை பயணமாக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ரஷியா புறப்பட்டு சென்றார். மாஸ்கோவில் நடைபெறும் உலகப்போர் வெற்றி தின அணிவகுப்பில் அவர் பங்கேற்கிறார்.
புதுடெல்லி :

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனிக்கு எதிராக ரஷியா வெற்றி பெற்ற 75-வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் மாஸ்கோவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, சீனா உள்பட 11 நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

இதற்காக இந்திய முப்படைகளை சேர்ந்த 75 வீரர்கள் ஏற்கனவே மாஸ்கோ சென்றுள்ளனர். அவர்கள் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்பார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று விமானம் மூலம் ரஷியா புறப்பட்டு சென்றார்.

முன்னதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘3 நாள் பயணமாக மாஸ்கோ செல்கிறேன். இந்த பயணம் இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவை பலப்படுத்தும் என்று நம்புகிறேன். 75-வது உலகப்போர் வெற்றி தின அணிவகுப்பிலும் பங்கேற்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

லடாக்கில் இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்திய பரபரப்பான சூழ்நிலையில், ராஜ்நாத் சிங்கின் ரஷிய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பயணத்தின்போது, ரஷிய ராணுவ உயர்அதிகாரிகளையும் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசுகிறார். அப்போது சீன தாக்குதல் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களாக மத்திய மந்திரிகள் யாரும் வெளிநாடு செல்லவில்லை. இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஜி20 நிதி மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்க ரியாத்துக்கும், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஜெர்மனிக்கும் சென்றனர்.

அதன்பின்னர் எந்த மந்திரிகளும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவில்லை. 4 மாதங்களுக்குபிறகு தற்போது தான் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News