செய்திகள்
பிரதமர் மோடி

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு- ஆதரவு அளித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்த மோடி

Published On 2020-06-18 06:11 GMT   |   Update On 2020-06-18 06:11 GMT
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினர் ஆவதற்காக உலக நாடுகள் வழங்கிய ஆதரவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி:

ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு துணை அமைப்புகள் இருந்தாலும், பாதுகாப்பு கவுன்சில்தான் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக கருதப்படுகிறது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. இவை தவிர நிரந்தரமற்ற உறுப்பினர்களாக 10 நாடுகள் இருந்து வருகின்றன. இதற்கான உறுப்பினர் பதவி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன.

இந்த வகையில், தற்போது காலியாக இருந்த 5 நாடுகளுக்கான உறுப்பினர் பதவியை நிரப்புவதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆசிய -பசிபிக் பிராந்தியத்தில் இருந்து இந்தியா போட்டியிட்டது. வேறு எந்த நாடும் போட்டியிடாத நிலையில், இந்தியா போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.



வரும் 2 ஆண்டுகளுக்கு இந்தியா ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக இருக்கும்.

193 உறுப்பினர்களை கொண்ட சபையில் 184 நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக  வாக்களித்துள்ளன. எட்டாவது முறையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக, உலக நாடுகள் வழங்கிய ஆதரவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார். உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு உலக நாடுகளுடன் இணைந்து  இந்தியா செயல்படும் என பிரதமர் மோடி கூறி உள்ளார்.

Tags:    

Similar News