செய்திகள்
மத்திய சுகாதார அமைச்சகம்

மத்திய சுகாதார அமைச்சகம் 2 நாட்களுக்கு மூடல்

Published On 2020-06-06 02:37 GMT   |   Update On 2020-06-06 02:37 GMT
5 பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், இன்றும் நாளையும் மத்திய சுகாதார அமைச்சகம் மூடப்படுகிறது. தீவிர சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
புதுடெல்லி:

நாட்டின் தலைநகரான டெல்லி, கொரோனா வைரஸ் தொற்று பரவலில் சிக்கி தவிக்கிறது. அங்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சுகாதாரத்தை கவனிக்கிற மத்திய சுகாதார அமைச்சகத்தினுள்ளும் (நிர்மாண் பவன்) கொரோனா வைரஸ் கால் பதித்துள்ளது. அங்கு ஒரு வார காலத்தில் ஒரு இயக்குனர், ஒரு துணைச்செயலாளர், ஒரு டாக்டர், 2 ஊழியர்கள் என 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது.

இவர்கள் சுகாதார அமைச்சகம் அமைந்துள்ள நிர்மாண் பவன் கட்டிடத்துக்கு அடிக்கடி சென்று வந்தவர்கள் ஆவர்.

எனவே அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும், தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே இன்னும் சிலருக்கு அங்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பல அதிகாரிகளுக்கும் கூட தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக இடைவெளியை சில நேரங்களில் அங்கு பின்பற்ற முடியாமல் போய்விடுவதாக சொல்லப்படுகிறது.

சுகாதார அமைச்சகத்தில் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே பணிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்திப்புகள், கூட்டங்கள் அனைத்தும் காணொலி காட்சி வழியாக மட்டுமே நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெருக்கடியான சூழலில் பணியாளர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தனை கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் கடந்த 7 நாட்களில் 5 பேருக்கு அங்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர வைப்பதாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) மூடப்படுகிறது. இந்த 2 நாட்களும் அங்கு தீவிரமாக சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அமைச்சக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது.

மேலும், இதன் ஒரு பகுதியாக அறைகள், கழிவறைகள், கதவு கைப்பிடிகள், சுவிட்சுகள், நாற்காலிகள், மேஜைகள், சோபாக்கள், அலமாரிகள், கணினி உபகரணங்கள், அச்சு எந்திரங்கள் போன்ற அனைத்தும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும். இதற்கான முறையான அறிவிப்பு நேற்று முன்தினமே வெளியிடப்பட்டு இருக்கிறது. 
Tags:    

Similar News