செய்திகள்
மதுபானங்கள்

கேரளாவில் ஆன்லைன் மூலம் மது விற்பனை தொடக்கம்

Published On 2020-05-28 06:58 GMT   |   Update On 2020-05-28 06:58 GMT
கேரளாவில் இன்று முதல் ஆன்லைன் மூலம் மது விற்பனை தொடங்கியது. ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் எஸ்.எம்.எஸ். மூலம் முன்பதிவு செய்து மதுபானம் வாங்கி கொள்ளலாம் என கலால் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் ஊரடங்கு அமலுக்கு வந்ததை தொடர்ந்து அங்கு செயல்பட்டு வந்த மதுக்கடைகளும் மூடப்பட்டன.

ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட பின்னரும் கேரளாவில் மதுக்கடைகள் திறக்கப்படாமல் இருந்தது. கடைகளை திறந்தால் கூட்டம் அலைமோதும் என்பதாலும், இதனால் நோய் பரவும் அபாயம் உருவாகும் என்பதாலும் மதுக்கடைகளை திறக்க மாநில அரசு தயக்கம் காட்டியது.

இதற்கு தீர்வு காண அதிகாரிகள் ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்ய ஏற்பாடு செய்தனர். இதற்காக தனியார் நிறுவனம் மூலம் ஆப் ஒன்றை உருவாக்கினர். பெவ் கியூ என்ற இந்த ஆப்பை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து அதில் வாடிக்கையாளர்கள் மது கேட்டு பதிவு செய்யலாம்.

பெவ் கியூ ஆப்புக்கு கூகுள் பிளே ஸ்டோர் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது. இந்த ஆப்பை பயன்படுத்தி இன்று முதல் கேரளாவில் மது பானங்கள் வாங்கி கொள்ளலாம்.

வாடிக்கையாளர் இந்த ஆப்பில் பதிவு செய்ததும் அருகில் உள்ள கடையில் மது வாங்குவதற்கான டோக்கன் வரும். அதனை காண்பித்து வாடிக்கையாளர் அந்த கடையில் மது வாங்கி கொள்ளலாம்.

ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு முறை 3 லிட்டர் மதுபானங்களே வழங்கப்படும். அதே நபர் அடுத்த 4 நாட்களுக்கு இந்த ஆப் மூலம் மது வாங்க முடியாது.

ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் எஸ்.எம்.எஸ். மூலம் முன்பதிவு செய்து மதுபானம் வாங்கி கொள்ளலாம் என கலால் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதன் மூலம் மதுக்கடைகளில் தேவையின்றி கூட்டம் கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News