செய்திகள்
பாராளுமன்ற நிலைக்குழு கூட்டம்

பாராளுமன்ற நிலைக்குழு கூட்டங்கள் நடத்த ஏற்பாடு - வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா ஆலோசனை

Published On 2020-05-26 07:21 GMT   |   Update On 2020-05-26 07:21 GMT
ரெயில், விமான சேவை தொடங்கி இருப்பதால், பாராளுமன்ற நிலைக்குழு கூட்டங்களை நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
புதுடெல்லி:

ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில், விமான சேவைகள் படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது. இதனால், எம்.பி.க்கள் டெல்லிக்கு வருவது சாத்தியம் ஆகியுள்ளது. இதையடுத்து, வழக்கமான பாராளுமன்ற நிலைக்குழு கூட்டங்களை நடத்த மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

இதுதொடர்பாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, இரு அவைகளின் செயலாளர்கள், அதிகாரிகள் ஆகியோருடன் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினார். இதில், பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷியும் பங்கேற்றார்.

இதில், சமூக இடைவெளியை பின்பற்றும்வகையில், இக்கூட்டங்களில் பங்கேற்க வேண்டிய இரு அவைகளின் அதிகாரிகள், அமைச்சக அதிகாரிகள் ஆகியோர் குறைந்த அளவில் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.

24 துறைரீதியான நிலைக்குழுக்கள் உள்ளன. அவற்றின் கூட்டங்களை நடத்த பாராளுமன்ற கட்டிடம் மற்றும் இணைப்பு கட்டிடத்தில் உள்ள 9 அறைகள் அடையாளம் காணப்பட்டன. இதர குழு கூட்டங்களை நடத்த 6 அறைகள் அடையாளம் காணப்பட்டன.

சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டி இருப்பதால், மைக்ரோபோன் வசதியுடன் கூடுதல் இருக்கைகளை பொருத்துமாறு வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.

மேலும், மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 37 பேர், ஊரடங்கு காரணமாக இன்னும் பதவி ஏற்கவில்லை. 31-ந் தேதிக்கு பிறகு, அவர்கள் பதவி ஏற்பதற்கான தேதியை முடிவு செய்யுமாறு மாநிலங்களவை செயலாளருக்கு வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.

அத்துடன், 18 மாநிலங்களவை காலியிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் கமிஷனுடன் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினார்.
Tags:    

Similar News