செய்திகள்
கோப்பு படம்

இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் - சீன வெளியுறவு அதிகாரி கருத்து

Published On 2020-05-12 01:27 GMT   |   Update On 2020-05-12 01:27 GMT
இந்திய-சீன எல்லையில் அமைதி நிலவ இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று சீன வெளியுறவு அதிகாரி கூறி உள்ளார்.
பீஜிங்:

சிக்கிம் மாநிலத்தில் உள்ள நகுலா கணவாய் பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த 9-ந் தேதி மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கி கொண்டனர். இதில் இரு தரப்பிலும் சிலர் காயம் அடைந்தனர். அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அங்கு அமைதி ஏற்பட்டது.

இதேபோல் லடாக்கில் சீன எல்லை பகுதியிலும் இரு தரப்பு வீரர்களும் கைகலப்பில் ஈடுபட்டதோடு, கல்வீசி தாக்கி கொண்டனர். பின்னர் அங்கும் அமைதி ஏற்படுத்தப்பட்டது.

இந்த மோதல்கள் பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியானிடம் நிருபர்கள் கருத்து கேட்ட போது அவர் கூறியதாவது:-

எல்லைப் பகுதியில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணி பாதுகாப்பதில் சீன எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உறுதியாக உள்ளனர். எல்லை விவகாரங்களை பொறுத்தமட்டில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய தகவல் தொடர்பும், ஒத்துழைப்பும் இருந்து வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு இந்த ஆண்டுடன் 70 ஆண்டுகள் ஆகின்றன. இரு தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பிரச்சினையை திறமையாக கையாண்டு கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காண்பதோடு, எல்லை பகுதியில் அமைதியையும், நிலைத்தன்மையையும் பேணவேண்டும்.

கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் இந்தியாவும், சீனாவும் கைகோர்த்து செயல்படுகின்றன.

கொரோனாவை ஒழிக்கும் பிரச்சினையில் சர்வதேச சமுதாயம் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். இந்த விஷயத்தில் அரசியலுக்கோ, கருத்து வேறுபாடுகளுக்கோ, மோதலுக்கோ இடம் கொடுக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News