செய்திகள்
கோப்பு படம்

தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு மத்திய குழுவினரை அனுப்பி வைக்க சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு

Published On 2020-05-09 16:52 GMT   |   Update On 2020-05-09 16:52 GMT
கொரோனா வேகமாக பரவிவரும் பட்டியலில் உள்ள தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு மத்திய குழுவினரை அனுப்பி வைக்க சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் நாடு முழுவதும் 59 ஆயிரத்து 662 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 39 ஆயிரத்து 834 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17 ஆயிரத்து 846 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும் இந்த கொடிய வைரசுக்கு ஆயிரத்து 981 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், கொரோனா வேகமாக பரவிய மற்றும் பரவி வரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் உள்பட 10 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கொரோனா அதிகம் பரவலாம் என்ற மத்திய பட்டியலில் தமிழ்நாடு, குஜராத், உத்தரபிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா ஆகிய 10 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.



இந்நிலையில், கொரோனா அதிகம் பரவும் இந்த 10 மாநிலங்களுக்கு மத்திய குழுவினரை அனுப்பி வைக்க சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

சுகாதாரத்துறை அமைச்சகத்தால் அனுப்பி வைக்கப்படும் இந்த மத்திய குழுவினர் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில சுகாதாரத்துறையினருக்கு தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையும் செய்வார்கள் என மத்திய அரசு தரப்பில் தெரிவித்துள்ளது.   
Tags:    

Similar News