செய்திகள்
உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடி

எம்.எல்.சி.யாக தன்னை நியமிக்க பிரதமரிடம் முறையிட்ட உத்தவ் தாக்கரே

Published On 2020-04-30 03:10 GMT   |   Update On 2020-04-30 03:10 GMT
தன்னை எம்.எல்.சி.யாக நியமிப்பதற்கு மந்திரிசபை பரிந்துரை மீது கவர்னர் முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தி வருவது தொடர்பாக பிரதமர் மோடியிடம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முறையிட்டார்.
மும்பை :

நாட்டின் மற்ற மாநில முதல்-மந்திரிகள் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில், மகாராஷ்டிரா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கொரோனாவுக்கு எதிராக மட்டுமின்றி தனது முதல்-மந்திரி பதவியை காப்பாற்றி கொள்ளவும் எதிர்நீச்சல் அடித்து வருகிறார். எம்.எல்.ஏ.வாகவோ அல்லது எம்.எல்.சி.யாகவோ இல்லாமல் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற உத்தவ் தாக்கரே அந்த பதவியில் நீடிப்பதற்கு அடுத்த மாதம் (மே) 28-ந் தேதிக்குள் மேற்கண்ட ஏதாவது ஒரு பதவிக்கு தேர்வாக வேண்டும்.

கொரோனாவால் தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டதால், கவர்னர் ஒதுக்கீட்டின் கீழ் காலியாக இருக்கும் எம்.எல்.சி. பதவியில் உத்தவ் தாக்கரேயை நியமிக்க கோரி மாநில மந்திரிசபை 2 முறை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு பரிந்துரை செய்தது. நேற்று முன்தினம் இதுதொடர்பாக ஆளும் மகா விகாஷ் கூட்டணி தலைவர்கள் கவர்னரை நேரில் சந்தித்து பேசி மந்திரி சபை பரிந்துரையின் மீது விரைவில் முடிவு எடுக்கும்படி வலியுறுத்தினர்.

இருப்பினும் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறார். மே 28-ந் தேதிக்குள் கவர்னர் அவரை எம்.எல்.சி.யாக நியமிக்காவிட்டால் தனது முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே இழக்க நேரிடும். இதன் காரணமாக உத்தவ் தாக்கரேயின் முதல்-மந்திரி பதவி ஊசலாடி கொண்டு இருக்கிறது.

இந்த இக்கட்டான சூழலில், தனது முதல்-மந்திரி பதவியை காப்பாற்றி கொள்வதற்கு எம்.எல்.சி. பதவி விவகாரத்தில் தலையிட கோரி பிரதமர் நரேந்திர மோடியிடம் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் பேசியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

அப்போது பிரதமர் மோடியிடம் அவர், மகாராஷ்டிரா அரசியல் ஸ்திரமின்மையை உருவாக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும், கொரோனா நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், இதுபோன்ற பிரச்சினையை பிரதமர் கவனிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்று, மந்திரிசபை பரிந்துரையை ஏற்று உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிக்கும்படி மகா விகாஷ் கூட்டணியை ஆதரிக்கும் சிறிய கட்சிகளான விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் ஜெயந்த் பாட்டீல், ஜனதா தளம் (எஸ்) மராட்டிய தலைவர் ஷரத் பாட்டீல், சுவாபிமானி சேத்காரி தலைவர் ராஜூ ஷெட்டி, ஆர்.பி.ஐ. (எஸ்) தலைவர் ஷியாம் கெய்க்வாட் ஆகியோர் கவர்னருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
Tags:    

Similar News