செய்திகள்
தொழிற்சாலை

ஆட்கள், பொருட்கள் இல்லாததால் 60 சதவீத தொழிற்சாலைகள் இயங்குவதில் பாதிப்பு

Published On 2020-04-27 10:39 GMT   |   Update On 2020-04-27 10:39 GMT
போதுமான ஆட்கள் இல்லாததாலும், மூலதன பொருட்கள் இல்லாமலும் 60 சதவீத தொழிற்சாலைகள் இயங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது 180 கம்பெனிகளில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி:

தொழிற்சாலைகளை பொறுத்தவரை நாடு முழுவதும் 50 சதவீத தொழில்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. பல்வேறு தடைகள் காரணமாக இந்த தொழிற்சாலைகள் இயங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போதுமான ஆட்கள் இல்லாததாலும், மூலதன பொருட்கள் இல்லாமலும் 60 சதவீத தொழிற்சாலைகள் உற்பத்தி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் நிபுணர்கள் 180 கம்பெனிகளில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

போக்குவரத்து வசதி இல்லாததால் சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள் மட்டுமே பணிக்கு வர முடியும். அவர்களுக்கு ‘பாஸ்’ கட்டாயமில்லை என்ற அனுமதியை பெற்று இருந்தாலும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது.



இதனால் அவர்களால் தொழிற்சாலைக்கு செல்ல முடியவில்லை. கொரோனா பாதிப்பு நிறைந்த பகுதியில் இருந்து வருபவர்களுக்கு வேலைக்கு செல்ல அனுமதி இல்லை. இதேபோல உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களும் தொழிற்சாலைக்கு வந்து சேருவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகிறது. போக்குவரத்து வசதி இல்லாததால் பொருள்கள் வரமுடியவில்லை.

மேலும் பல மாநிலங்களில் சில கம்பெனிகளுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. தொழிற்சாலைகள் இயங்க அனுமதி கிடைத்தாலும் ஆட்கள், பொருட்கள் இல்லாததால் உற்பத்தி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான நிபந்தனைகளை நீக்குமாறு இந்திய தொழில் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags:    

Similar News