செய்திகள்
சோனியா காந்தி, பிரதமர் மோடி

சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்றுங்கள் - பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

Published On 2020-04-26 08:29 GMT   |   Update On 2020-04-26 08:29 GMT
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்றுங்கள் என பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவால்பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

இந்நிலையில், சிறு, குறு நிறுவனங்களைக் காப்பாற்றுங்கள் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதிலிருந்து கடந்த 5 வாரங்களாக பல்வேறு சவால்களை சந்தித்துள்ளோம். கொரோனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில், நாட்டின் பொருளாதாரத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கையும், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 50 சதவீத பங்கையும் அவை கொண்டுள்ளன.

ஊரடங்கால், இத்துறைகள் ரூ.30 ஆயிரம் கோடிக்கும் மேல் இழப்பை சந்தித்துள்ளன. நிறுவனங்களுக்கு விற்பனை ஆர்டர்கள் இல்லாததால், பலருக்கும் சம்பளம், வேலைவாய்ப்பு இல்லாமல் போனது.

எனவே மத்திய அரசு இதில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அவர்களைக் காப்பதுடன் பொருளாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும்என வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News