செய்திகள்
கோப்பு படம்

33 கோடி ஏழைகளுக்கு ரூ.31,235 கோடி வினியோகம் - மத்திய அரசு நடவடிக்கை

Published On 2020-04-24 03:47 GMT   |   Update On 2020-04-24 03:47 GMT
ஊரடங்கு பாதிப்பில் இருந்து காக்க 33 கோடிக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு மத்திய அரசு இதுவரை ரூ.31 ஆயிரத்து 235 கோடி வினியோகித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த 24-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கு பாதிப்பில் இருந்து காப்பதற்காக, ஏழை மூத்த குடிமக்கள், விதவைகள், பெண்கள், விவசாயிகள் ஆகியோருக்கு வங்கிக்கணக்கில் பணம் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

கடந்த மாதம் 26-ந் தேதி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ‘பிரதம மந்திரி கரீப் கல்யாண் பேக்கேஜ்’ என்ற இத்திட்டத்தை அறிவித்தார்.

இத்திட்டத்தின்படி, இதுவரை 33 கோடிக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு ரூ.31 ஆயிரத்து 235 கோடி, வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதை பிரதமர் அலுவலகம், மந்திரிசபை செயலகம், மத்திய நிதி அமைச்சகம், மாநில அரசுகள் ஆகியவை கண்காணித்து வருகின்றன.

மத்திய அரசு அளித்த நிதி உதவி விவரம் வருமாறு:-

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள் 75 சதவீத தொகையை ஆன்லைன் மூலம் எடுக்க அனுமதிக்கப்பட்டது. அதன்படி, இதுவரை 6 லட்சத்து 6 ஆயிரம் சந்தாதாரர்கள் மொத்தம் ரூ.1,954 கோடி பணத்தை எடுத்துள்ளனர்.

நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கித்தொகை ரூ.7 ஆயிரத்து 300 கோடி வினியோகிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் 22 லட்சத்து 12 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் ‘பிரதமர்-கிசான்’ திட்டத்தில், 8 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.16 ஆயிரத்து 146 கோடி வினியோகிக்கப்பட்டு உள்ளது.

ஜன்தன் யோஜனா பெண் வாடிக்கையாளர்கள் வங்கிக்கணக்கில் தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் கோடி போடப்பட்டுள்ளது.

முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.1,405 கோடி வினியோகிக்கப்பட்டது. கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 497 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

19 லட்சத்து 63 ஆயிரம் டன் உணவு தானியங்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து 9 ஆயிரம் பருப்பும் வழங்கப்பட்டது.

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில் 2 கோடியே 66 லட்சம் இலவச சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டன.
Tags:    

Similar News