செய்திகள்
கோப்புபடம்

குடிமக்களுக்கு மதுபானம் வாங்க சிறப்பு பாஸ் - கேரள அரசு வழங்குகிறது

Published On 2020-04-01 04:54 GMT   |   Update On 2020-04-01 04:54 GMT
குடியை விடமுடியாமல் தவிக்கும் குடிப்பிரியர்களுக்கு மருத்துவர்களின் சிபாரிசின் பேரில், மதுபானம் வாங்க கேரள அரசு சிறப்பு ‘பாஸ்’ வழங்குகிறது.
திருவனந்தபுரம்:

கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் 21 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் குடிப்பிரியர்கள் தவித்து வருகிறார்கள்.

குடிக்கு அடிமையானவர்கள் திடீர் என்று அதை நிறுத்துவதால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்கு கைகால் நடுக்கம், மயக்கம், வலிப்பு, தூக்கமின்மை போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. சிலர் தற்கொலைகூட செய்து கொள்கிறார்கள். இவ்வாறாக கேரளாவில் இதுவரை 3 பேர் தற்கொலை செய்து இருக்கிறார்கள்.

இந்தநிலையில் குடிப் பழக்கத்தை விடமுடியாத குடிமக்களுக்கு கேரள அரசு சிறப்பு ‘பாஸ்’கள் வழங்குகிறது.

இதற்கான உத்தரவு திங்கட்கிழமை இரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி குடிப்பழக் கத்தை விடமுடியாமல் பக்க விளைவுகளை சந்திப்பவர்களுக்கு மருத்துவர்களின் சிபாரிசுகளின்படி கட்டுப்பாடான அளவில் மதுபானம் வழங்கப்படும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

சிறப்பு மதுபான ‘பாஸ்’ பெற விரும்பும் ‘குடி’மக்கள் ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்ற ஏதாவது ஒன்றை அணுகி “இவர் குடிப்பழக்கத்தை விட்டதால், பக்க விளைவுகளை சந்தித்து வருபவர்” என்பதற்கான டாக்டர் பரிந்துரையை பெறவேண்டும்.

அதோடு அரசு அளித்து இருக்கும் அடையாள அட்டையையும் சேர்த்து, வணிக வரித்துறை அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அவர்கள் சிறப்பு மதுபான ‘பாஸ்’களை வழங்குவார்கள்.

அதை கூட்டுறவு சங்க அங்காடிகளில் காட்டி குடிப்பிரியர்கள் மது வாங்கிக் கொள்ளலாம்.

கேரள அரசின் இந்த முடிவுக்கு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் விஜயகிருஷ்ணன் இதுபற்றி கூறும்போது, “இது மருத்துவ மூடத்தனம். குடியை விடமுடியாதவர்கள் டாக்டர்களை அணுகினால் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப் போகிறார்கள். அதைவிடுத்து அவர்களுக்கு அரசே மது வழங்குவது என்பது மருத்துவர்களின் தார்மீக உரிமையை அவமதிப்பதாகும்” என்றார்.

அரசின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்து, கேரளாவில் டாக்டர்கள் இன்று (1-ந்தேதி) கறுப்பு தினம் கடைப்பிடிக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார்கள்.
Tags:    

Similar News