செய்திகள்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

மது அடிமைகளுக்கு டாக்டர் பரிந்துரைப்படி மதுபானம் வழங்க கேரள முதல்வர் உத்தரவு

Published On 2020-03-30 05:03 GMT   |   Update On 2020-03-30 05:03 GMT
கேரளாவில் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்வதாக தகவல் வெளியானதையடுத்து, மது அடிமைகளுக்கு டாக்டரின் பரிந்துரைப்படி மதுபானம் வழங்க கேரள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
திருவனந்தபுரம்:

கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே தொடர்ந்து செயல்படுகின்றன. பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படியே வெளியே வந்தாலும் சமூக விலகலை கடைப்பிடிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கால் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் கேரளாவில் சிலர் தற்கொலை செய்துள்ளனர். மதுவுக்கு அடிமையானவர்கள் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இதுபற்றி முதல்வர் பினராயி விஜயன் இன்று புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார். மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரைப்படி மதுபானங்கள் வழங்கலாம் என கலால் துறைக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறார். 

மதுவை கைவிட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சையை வழங்கவும் அவர்களை மறுவாழ்வு மையங்களில் சேர்க்கவும் கேரள அரசு கலால் துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மதுபானம் திடீரென கிடைக்காமல் போவது, சமூகப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் ஆன்லைனில் மது விற்பனை செய்வது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் தெரிவித்திருந்தார்.
Tags:    

Similar News