செய்திகள்
கோப்பு படம்

ஊரடங்கு உத்தரவு: சரக்கு ரெயில் பதுங்கி சென்ற வட மாநிலத்தினர் - கையும் களவுமாக பிடித்த போலீஸ்

Published On 2020-03-28 00:25 GMT   |   Update On 2020-03-28 01:54 GMT
ஊரடங்கு உத்தரவு காரணமாக சரக்கு ரெயில் பதுங்கி சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்ற 50-க்கும் அதிகமான வட மாநிலத்தினரை ரெயில்வே போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
லக்னோ:

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 748 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. மேலும், இந்த வைரசுக்கு இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதற்கிடையே, வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.    

இதன் காரணமாக நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளது. 

ஊரடங்கு காரணமாக மற்ற மாநிலங்களில் வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தங்கியிருந்தவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் சிக்கியுள்ளனர்.   

இந்நிலையில், டெல்லியில் இருந்து ஹவுராவுக்கு இயக்கப்படும் சரக்கு ரெயிலில் சிலர் பதுங்கி வருவதாக உத்தரபிரதேச மாநில ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அம்மாநிலத்தின் இட்வா ரெயில் நிலையத்திற்கு சரக்கு ரெயில் வந்த போது அதில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 

அந்த சோதனையின் போது சரக்கு ரெயிலில் பதுங்கி இருந்த 50-க்கும் அதிகமானோரை ரெயில்வே போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். 

பிடிபட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அனைவரும் உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவே இவ்வாறு சரக்கு ரெயிலில் பதுங்கி பயணம் செய்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு  பிடிபட்ட நபர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறிப்பாக, சரக்கு ரெயிலில் பதுங்கி வந்த அனைவருக்கும் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் யாருக்கும் கொரோனா பரவவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. 
Tags:    

Similar News