செய்திகள்
பாராளுமன்றம்

மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள்- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

Published On 2020-03-24 10:40 GMT   |   Update On 2020-03-24 10:40 GMT
கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக, மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
புதுடெல்லி:

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசுக்கு 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். 

இந்தியாவிலும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் திவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் வைரசின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. 

நாடு முழுவதும் 75 மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் வைரஸ் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்துவதற்கு தேவையான நிதியை ஒதுக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. 

கொரோனா பாதிப்புள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு, மருத்துவமனைகளில் கூடுதலாக தனிமை வார்டுகள் மற்றும் பரிசோதனை கூடங்கள் அமைக்க வேண்டும். மருத்துவமனைகளில் வென்டிலேட்டர்கள், முககவசங்கள், மருந்துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
Tags:    

Similar News