செய்திகள்
கமல்நாத்

கவிழும் நிலையில் மத்திய பிரதேச அரசு... ராஜினாமா செய்கிறார் கமல்நாத்?

Published On 2020-03-20 05:49 GMT   |   Update On 2020-03-20 05:49 GMT
மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்திருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக முதல்வர் கமல்நாத் தனது பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
போபால்:

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறி பாஜகவில் இணைந்தார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரும் ராஜினாமா செய்தனர். அவர்களில் 6 மந்திரிகளின் ராஜினாமாவை மட்டும் சபாநாயகர் ஏற்றார். மற்ற 16 பேரின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்படவில்லை. 

எம்எல்ஏக்களின் ராஜினாமாவால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல் சபை 26-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த இடைவெளிக்குள் அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்துவிடலாம் என காங்கிரஸ் கட்சி தலைமை நம்பியது. ஆனால் அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. 

இதற்கிடையே, சட்டசபையில் மார்ச் 20ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டம் ஒழுங்கு மீறப்படாமல் இருப்பதை தலைமைச் செயலாளர் உறுதி செய்ய வேண்டும். சட்டசபை நிகழ்வுகள் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று நள்ளிரவில் மீதமுள்ள 16 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களையும் சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். இதனால் கமல் நாத் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. 

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினால் நிச்சயம் அரசு தோல்வியடையும் நிலை உள்ளது. எனவே, அதற்கு முன்னதாகவே கமல்நாத் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்நாத் வீட்டில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு கமல்நாத் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அப்போது தனது முடிவை அறிவிப்பார்.
Tags:    

Similar News