செய்திகள்
போபால் விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

ம.பி.யில் அரசியல் பரபரப்பு: ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போபால் வந்தனர்

Published On 2020-03-15 07:15 GMT   |   Update On 2020-03-15 08:53 GMT
மத்திய பிரதேசம் மாநில சட்டசபையில் நாளை கமல்நாத் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில்ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போபால் வந்தடைந்தனர்.
போபால்:

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
 
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும், கமல்நாத்துக்கும் இடையே நீண்டகாலமாக கருத்து வேறுபாடு இருந்தது. இதைத்தொடர்ந்து அவர் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சமீபத்தில் இணைந்தார்.

ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களான 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதன் காரணமாக கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

22 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா ஏற்கப்பட்டால் சட்டசபையில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துவிடும்.

இந்நிலையில், சட்டசபையில் நாளை (16-ம் தேதி) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் நர்மதா பிரசாத் பிரஜாபதிக்கு அம்மாநில கவர்னர் லால்ஜி டான்டன் உத்தரவிட்டுள்ளார். இது மத்திய பிரதேச அரசியலில் திடீர் திருப்பமாக கருதப்படுகிறது. நேற்று நள்ளிரவில் இந்த உத்தரவை கவர்னர் பிறப்பித்துள்ளார்.



நாளை காலை 11 மணிக்கு சட்டசபை கூடியதும் கவர்னர் உரைக்கு பிறகு சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். டிவிசன் முறையில் ஓட்டெடுப்பு நடைபெறும்.

ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். ராஜினாமா செய்த 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.

16 காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை இன்னும் சபாநாயகர் ஏற்கவில்லை. பெங்களூரில் முகாமிட்டிருந்த கமல்நாத்தின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போபால் திரும்பியுள்ளனர்.

இதற்கிடையில், கமல்நாத் ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இன்று காலை அவர்கள் விமானம் மூலம் போபால் வந்தடைந்தனர்.

முன்னதாக, இன்று காலையில் இருந்து போபால் நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. போபால் வந்தடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் எங்கள் ஆட்சிக்கு 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.

நாளைய வாக்கெடுப்பின்போது சட்டசபையில் எங்கள் பலத்தை நிரூபிப்போம் என நம்பிக்கை தெரிவித்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் போபால் விமான நிலையத்தில் இருந்து பஸ் மூலம் மேரியட் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

230 உறுப்பினர் கொண்ட மத்திய பிரதேச சட்டசபையில் ஏற்கனவே இரு இடங்கள் காலியாக உள்ளன.

தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேரின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதால் சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 222-ஆக குறைந்துள்ளது. மெஜாரிட்டிக்கு 113 பேர் தேவை.

22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதற்கு முன்பு காங்கிரசில் 115 உறுப்பினர்கள் இருந்தனர். மேலும் 4 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள், 2 பகுஜன்சமாஜ் கட்சி உறுப்பினர்கள், 1 சமாஜ்வாடி எம்.எல்.ஏ. ஆகியோரின் ஆதரவை இந்த கட்சி பெற்றிருந்தது. பா.ஜனதாவுக்கு 107 உறுப்பினர்கள் உள்ளனர்.

நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு தப்புமா? அல்லது, அங்கு ஆட்சி கவிழுமா? என்பது இன்னும் 24 மணி நேரத்துக்குள் தெரிந்துவிடும்.
Tags:    

Similar News