செய்திகள்
மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அரசு தயார் - சுகாதார மந்திரி அறிவிப்பு

Published On 2020-03-09 20:56 GMT   |   Update On 2020-03-09 20:56 GMT
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.
புதுடெல்லி:

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் மற்ற நாடுகளைப்போல இந்தியாவிலும் தற்போது பரவி வருகிறது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங் களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வைரஸ் அறிகுறிகள் உள்ள ஏராளமானோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். இதனால் நாடு முழுவதும் வைரஸ் பீதி அதிகரித்து உள்ளது.

ஆனால் அச்சுறுத்தும் இந்த கொரோனா வைரசை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

கொரோனா வைரசை எதிர்கொள்வதற்கு அரசு தயாராக இருக்கிறது. வைரஸ் தடுப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை அனைத்து மொழிகளிலும், அனைத்து மாநிலங்களுக்கும் நாங்கள் அனுப்பி இருக்கிறோம்.

இந்த வைரசை வீரியமாக ஒடுக்குவதற்காக சோதனைக்கூடங்கள், பணியாளர்கள் என அனைத்து வசதிகளையும் வலுவாக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம். அத்துடன் சிறப்பு நடவடிக்கைக்குழுவையும் விரைவில் அமைக்குமாறு கேட்டுக்கொண்டு உள்ளோம்.

ஈரானில் தவித்து வரும் இந்தியர்களை மீட்பதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்காக விஞ்ஞானிகள் குழு மற்றும் நடமாடும் பரிசோதனைக்கூடங்களை அனுப்பியிருக்கிறோம்.

இந்த குழுவினரின் குடியுரிமை சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்ததும், பரிசோதனை நடவடிக்கைகள் தொடங்கப்படும். இந்த பரிசோதனையில் வைரஸ் தொற்று இல்லாதவர்கள் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுவர்.

டெல்லியில் வைரஸ் தொற்று காணப்பட்டாலும் அங்கு எந்த தீவிர நிலையும் இல்லை. இங்கு தொற்று அதிகரித்தால் அதை சமாளிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய தனி வார்டுகள், தனிமைப்படுத்தப்படும் வசதிகள், டாக்டர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்து இருக்கிறோம்.

இவ்வாறு ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.

முன்னதாக டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், துணைநிலை கவர்னர் அனில் பைஜால் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஹர்ஷவர்தன் ஆலோசனை நடத்தினார்.
Tags:    

Similar News