செய்திகள்
தவறி விழுந்த இளம்பெண்ணை இன்ஸ்பெக்டர் ஜலீல் மீட்ட காட்சி.

கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண்ணை கயிறு கட்டி மீட்ட இன்ஸ்பெக்டருக்கு குவியும் பாராட்டு

Published On 2020-02-24 07:32 GMT   |   Update On 2020-02-24 10:09 GMT
கேரளாவில் கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண்ணை தீயணைப்பு வீரர்கள் வராததால் கயிறு கட்டி மீட்ட இன்ஸ்பெக்டருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகிறது.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வைரம்கோடு பகுதியில் உள்ள பகவதிம்மன் கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. விழாவை காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

இரவு நேரத்தில் திருவிழாவை காண வந்த இளம்பெண் அங்குள்ள மதில்சுவர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தார். 4 அடி ஆழ தண்ணீர் மட்டுமே இருந்ததால் மூழ்கவும் இல்லை. காயமும் ஏற்படவில்லை.

இருட்டில் கிணற்றில் தத்தளித்த இளம்பெண் தன்னிடம் இருந்த செல்போன் மூலம் திரூர் இன்ஸ்பெக்டர் ஜலீலை தொடர்பு கொண்டு தான் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடுவதாகவும், காப்பாற்றும்படி கூறி அழுதார்.

அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் ஜலீல் தனது உதவி அதிகாரிகளுடன் சம்பவ இடத்துக்கு வந்தார். இளம்பெண்ணை மீட்க தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் 2 மணிநேரத்துக்கும் மேல் ஆகியும் வீரர்கள் வரவில்லை. கிணற்றில் இறங்க பொதுமக்களும் அச்சம் அடைந்தனர்.

இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஜலீல் கயிறு கட்டி கிணற்றில் இறங்கினார். கிணற்றில் தவித்த இளம்பெண்ணை கயிறு கட்டி போலீஸ் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டார். மீட்கப்பட்ட இளம்பெணை திரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இன்ஸ்பெக்டரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பாராட்டை பெற்று வருகிறது.
Tags:    

Similar News