செய்திகள்
ஆதார் அட்டை

குடியுரிமையை நிரூபிக்க 127 பேருக்கு நோட்டீஸ்- யூ.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு உத்தரவு

Published On 2020-02-19 10:15 GMT   |   Update On 2020-02-19 10:15 GMT
சட்ட விரோதமாக ஆதார் அட்டையை பெற்று உள்ளதாகவும் இதனால் குடியுரிமையை நிரூபியுங்கள் என்றும் ஐதராபாத்தை சேர்ந்த 127 பேருக்கு யூ.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐதராபாத்:

குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்.) ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சட்ட விரோதமாக ஆதார் அட்டையை பெற்று இருக்கிறார்கள் என்றும் இதனால் உங்கள் குடியுரிமையை நிரூபியுங்கள் என்றும் ஐதராபாத்தை சேர்ந்த 127 பேருக்கு யூ.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.

நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்களில் பழைய ஐதராபாத் தலாப்கட்டா பகுதியை சேர்ந்த முகமது சத்தாரும் ஒருவர். ஆட்டோ டிரைவரான அவருக்கு ஆதார் செயல்படுவதை மேற்பார்வையிடும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூ.ஐ.டி.ஏ.ஐ.), அனுப்பிய நோட்டீசில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நீங்கள் தவறான வழிமுறைகள் மூலம் ஆதார் அட்டையை பெற்று உள்ளீர்கள். தவறான தகவல்கள் மற்றும் போலி ஆவணங்களை கொடுத்து ஆதார் அட்டை பெற்று இருக்கிறீர்கள்.

இதனால் வருகிற 20-ந்தேதி காலை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி உங்களது குடியுரிமையை நிரூபிக்க வேண்டும். ஒரிஜினல் ஆவணங்களை கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முகமது சத்தார் ஒரு வேளை இந்திய நாட்டவர் இல்லை என்றால் அவர் சட்டப்பூர்வமாக இந்தியாவுக்குள் எப்படி நுழைந்தார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை செய்ய தவறினால் யூ.ஐ.டி.ஏ.ஐ. ஒரு முடிவை எடுக்கும் என்றும் அந்த கடிதத்தில் எச்சரிகை விடுத்துள்ளது.

இதுகுறித்து அவரது வக்கீல் முசாபர் உல்லா கான் நிரூபர்களிடம் கூறியதாவது:-

யூ.ஐ.டி.ஏ.ஐ. இதுவரை எத்தனை பேருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்று தெளிவாக தெரிவிக்கவில்லை. ஆயிரம் பேர் வரை அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்திய குடிமக்களை வரவழைத்து அவர்களின் குடியுரிமையை கேள்வி கேட்க யூ.ஐ.டி.ஏ.ஐ.க்கு அதிகாரம் வழங்கியது யார்?

இதுதொடர்பாக யூ.ஐ.டி.ஏ.ஐ.க்கு எதிராக தெலுங்கானா கோர்ட்டில் வழக்கு தொடர இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News