செய்திகள்
பீட்டர் முகர்ஜி

ஷீனா போரா கொலை வழக்கு - பீட்டர் முகர்ஜிக்கு ஜாமீன் வழங்கியது மும்பை ஐகோர்ட்

Published On 2020-02-06 12:02 GMT   |   Update On 2020-02-06 12:02 GMT
ஷீனா போரா கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பீட்டர் முகர்ஜிக்கு மும்பை ஐகோர்ட் இன்று ஜாமீன் வழங்கியது.
மும்பை :

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி (43), தனது மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
இந்திராணி ஏற்கனவே நடந்த இரு திருமணங்கள் மற்றும் முன்னாள் கணவர்கள் மூலம் பிறந்த 3 பிள்ளைகள் பற்றிய விவரத்தையும் மறைத்து பீட்டர் முகர்ஜியை மூன்றாவதாக மணந்ததாகக் கூறப்படுகிறது.

பீட்டர் முகர்ஜிக்கு அவருடைய முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை ஷீனா போரா முறை தவறி காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு இந்திராணியின் 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

சி.பி.ஐ. விசாரித்துவரும் இந்த கொலை வழக்கில் இந்திராணி, சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய், மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜி  ஆகிய 4 பேரையும் மும்பை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மும்பையில் உள்ள ஆர்தர் சாலை மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 47 வயதாகும் இந்திராணி முகர்ஜி பைகுல்லா பெண்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, சிறையில் உள்ள பீட்டர் முகர்ஜி ஜாமீன் கோரி மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுமீதான விசாரணைந் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு மும்பை சிறப்பு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷீனா போரா கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பீட்டர் முகர்ஜிக்கு மும்பை ஐகோர்ட் இன்று ஜாமீன் வழங்கியது. ஆனால், சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய 6 வார கால அவகாசம் வழங்கிய நீதிமன்றம், அதுவரை பீட்டர் முகர்ஜி சிறையில் இருக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News