செய்திகள்
சரக்கு ரெயில்

சரக்கு ரெயில்களில் இனி துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள்

Published On 2020-02-01 05:12 GMT   |   Update On 2020-02-01 05:12 GMT
சரக்கு ரெயில்களில் கொண்டு செல்லப்படும் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களை அனுமதிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி: 

இந்தியாவில் தினமும் 9,200 க்கும் மேற்பட்ட சரக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறன. சரக்கு ரெயில்களின் சராசரி வேகம் மணிக்கு 24  கிலோமீட்டர். அதிகபட்ச வேகம் மணிக்கு 60 முதல் 75 கிமீ. இது சரக்கு ரெயிலின் மொத்த எடையை பொறுத்து மாறுபடும். தற்போது  உள்ள நவீன கன்டெய்னர் கொண்ட சரக்கு ரெயில்கள் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வரை செல்கிறது. 

சரக்குகளை அதிக அளவில் மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு சரக்கு ரெயில்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் நிலக்கரி,  இரும்பு, பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருட்கள் மற்றும் பல பொருட்களை கொண்டு செல்வதற்கு பயன்படுகிறது. 



இந்நிலையில், சரக்கு ரெயில்களில் கொண்டு செல்லப்படும் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துப்பாக்கி ஏந்திய  தனியார் ஏஜென்சி பாதுகாவலர்களை அனுமதிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

இதுகுறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எளிதில் திருடப்படக்கூடிய பொருட்களை கொண்டு  செல்லும் ரெயில்கள் மற்றும் திருட்டுகள் நடக்கக்கூடிய வழித்தடத்தில் செல்லும் ரெயில்களின் பிரேக் வேனில் (சரக்கு ரெயிலின்  இறுதிபெட்டி) ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

முதல்கட்டமாக கிழக்கு ரெயில்வே மண்டலத்தில்  ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் செல்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, மேலும் இது மற்ற ரெயில்வே மண்டலங்களுக்கு நீட்டிப்பது  தொடர்பாக, ஆறு மாத காலத்திற்குப் பிறகு மதிப்பாய்வு செய்யப்படும்’, என கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News