செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் - 60 விமானங்களில் வந்த 13 ஆயிரம் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை

Published On 2020-01-23 22:43 GMT   |   Update On 2020-01-23 22:43 GMT
கொரோனா வைரஸ் பரவும் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு 60 விமானங்களில் வந்த 12,828 பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என தெரியவந்தது.
புதுடெல்லி:

சீனாவில் கொரோனா என்ற நவீன வைரஸ் பரவி வருவதால் அங்கு பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலர் இறந்துள்ளனர். எனவே சீனாவின் எந்த விமான நிலையத்தில் இருந்தும் இந்தியாவுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த 17-ந் தேதி உத்தரவிட்டது.

விமான போக்குவரத்து அமைச்சகமும் விமான நிறுவனங்கள் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா? என்பதில் சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதோடு விமான நிலையத்தில் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனை குறித்து விமானத்திலேயே அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. சீனாவுக்கு செல்லும் பயணிகளுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளும்படி பயண ஆலோசனையும் வழங்கப்பட்டது.

மத்திய அரசின் உத்தரவுப்படி டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், கொச்சின் ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 22-ந் தேதி வரை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு 60 விமானங்களில் வந்த 12,828 பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை செயலாளர் பிரீத்தி சுதன் இந்த மருத்துவ பரிசோதனை நடத்தப்படுவதையும், இதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார்.

மாநில அரசுகள் ஆஸ்பத்திரிகளில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான தனி வார்டு, காற்றோட்ட வசதி, தேவையான கண்காணிப்பு, ஆய்வக வசதி ஆகியவைகளை தயார்நிலையில் வைத்திருக்கவும் சுகாதார செயலாளர் பிரீத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே சவுதி அரேபியாவில் வேலைபார்த்துவந்த கேரளா நர்சு ஒருவருக்கு மருத்துவ சோதனை செய்ததில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், இந்த பிரச்சினையை வளைகுடா நாடுகளின் கவனத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்றும், சிறந்த சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுகொண்டுள்ளார்.

ஆனாலும் கேரள மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், நர்சுக்கு வைரஸ் பாதிப்பு உள்ளதாக எந்த தகவலும் இல்லை என்று கூறியுள்ளனர்.
Tags:    

Similar News