செய்திகள்
கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது ஏன்?- கேரள அரசிடம் விளக்கம் கேட்ட கவர்னர்

Published On 2020-01-18 05:41 GMT   |   Update On 2020-01-18 05:41 GMT
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இதுகுறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கவர்னர் ஆரிப் முகம்மது தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

மத்திய அரசு சமீபத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கேரள அரசு சிறப்பு சட்டசபையை கூட்டி குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் ஆதரவை தெரிவித்தன.

மேலும் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து கேரள அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த முதல் மாநிலம் கேரளா என்பதால் அது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது பற்றி தன்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்று கவர்னர் ஆரிப் முகம்மது கான் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு சார்பில் ஒரு வழக்கு தொடர வேண்டும் என்றால் அதுபற்றி மாநில கவர்னரிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று அரசியல் அமைப்பு சட்டம் 34-ன் பிரிவு 2-ல் கூறப்பட்டுள்ளது.

கேரள அரசு சட்டத்தை பின்பற்றாமல் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுபற்றி மாநில அரசு கவர்னருக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.



இப்போது காலனி ஆட்சி நடக்கவில்லை என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறி உள்ளார். நானும் அதையேதான் கூறுகிறேன். இப்போது நடப்பது சட்டத்தின் ஆட்சி. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். சட்டத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

கேரள மாநிலத்தின் சட்டதிட்டங்களுக்கு நான்தான் தலைமை பொறுப்பு வகிக்கிறேன். எனவேதான் சட்டப்படி எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய வி‌ஷயங்களை தெரிவிக்காமல் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கேரளா, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News