செய்திகள்
டெல்லி மருத்துவ மாணவி கொலை குற்றவாளிகள்

நிர்பயா வழக்கு - தூக்கில் போடப்படும் ஜெயிலுக்கு 4 குற்றவாளிகளும் மாற்றம்

Published On 2020-01-17 08:03 GMT   |   Update On 2020-01-17 08:03 GMT
நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் நேற்று மாலை தூக்கு போடும் வசதி கொண்ட 3-ம் எண் ஜெயிலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை பெற்ற முகேஷ்சிங், வினய்சர்மா, அக்‌ஷய்குமார், பவன்குப்தா ஆகிய 4 பேருக்கும் 22-ந்தேதிக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று டெல்லி கோர்ட்டு சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் தூக்கில் போடுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தூக்கில் போடுவதற்கு முன்பு 4 பேர் எடையையும் கருத்தில் கொண்டு அதே எடை கொண்ட பொருளை தூக்கில் தொங்கவிட்டு பரிசோதிப்பது வழக்கம். அந்த பணிகள் முடிந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

திகார் ஜெயிலில் பல சிறை கூடங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் எண்கள் வழங்கப்பட்டுள்ளது.

தூக்கில் போடுவதற்கான வசதி 3-ம் எண் சிறை கூடத்தில் மட்டுமே உள்ளது. தற்போது 4 கைதிகளும் 2-ம் எண் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை நேற்று மாலை தூக்கு போடும் வசதி கொண்ட 3-ம் எண் ஜெயிலுக்கு மாற்றி உள்ளனர்.

இதன் மூலம் 22-ந்தேதி தூக்கில் போடுவதற்கு சிறை நிர்வாகத்தினர் எல்லா ஏற்பாடுகளை முடித்துவிட்டு காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையே மரண தண்டனையை தள்ளி போடும் வகையில் முகேஷ் சிங், வினய்சர்மா ஆகியோர் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுதாக்கல் செய்திருந்தனர். அது ஏற்கனவே தள்ளுபடியாகி விட்டது.

இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ்சிங் ஜனாதிபதியிமும், டெல்லி கவர்னரிடமும் கருணை மனுதாக்கல் செய்தார். அந்த கருணை மனுவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.

இந்த நிலையில் கருணை மனு ஜனாதிபதியிடம் இருப்பதால் தனது மரண தண்டனை நிறைவேற்றத்தை ஒத்திவைக்கும்படி டெல்லி கோர்ட்டில் முகேஷ்சிங் மனுதாக்கல் செய்துள்ளார்.

இதுசம்பந்தமாக கோர்ட்டு டெல்லி திகார் ஜெயில் நிர்வாகத்திடமும், டெல்லி நிர்வாகத்திடமும் விளக்கம் கேட்டுள்ளது. விரிவான அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி திகார் ஜெயிலுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



மேலும் ஜனாதிபதி கருணை மனு நிராகரித்தற்கு பின்பு 14 நாட்கள் வரை தூக்கு தண்டனையை நிறைவேற்றக்கூடாது என விதிகள் இருக்கிறது. இதை டெல்லி அரசு ஏற்கனவே கோர்ட்டில் சுட்டிக்காட்டி உள்ளது.

இதன் காரணமாக 22-ந்தேதி 4 பேரும் தூக்கில் போடப்படுவார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்துள்ள நிலையில் 22-ந்தேதிக்கு பிறகே அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Tags:    

Similar News