செய்திகள்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்

16 நாட்டு தூதர்கள் இன்று ஜம்மு காஷ்மீர் பயணம்

Published On 2020-01-09 04:28 GMT   |   Update On 2020-01-09 04:28 GMT
அமெரிக்கா உள்பட 16 நாட்டு தூதர்கள் இரண்டு நாட்கள் பயணமாக இன்று ஜம்மு காஷ்மீர் செல்கின்றனர். காஷ்மீரில் உள்ள நிலவரத்தை நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.
புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. 

இந்நிலையில்  அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் கொண்ட குழுவினர், இரண்டு நாட்கள் பயணமாக  இன்று ஜம்மு-காஷ்மீர் செல்கின்றனர்.  டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஸ்ரீநகர் செல்லும் இந்தக் குழுவினர், நாளை ஜம்மு செல்ல உள்ளனர். 

இந்த குழுவினர், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் முர்முவை சந்தித்து பேசுகின்றனர். காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்வர். ஜம்மு காஷ்மீர் மக்கள் குழுவினரையும் இந்தக் குழுவினர் சந்திப்பார்கள் எனக் கூறப்படுகிறது. 

ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு பிறகு வெளிநாட்டு குழு ஜம்மு காஷ்மீர் செல்வது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு, ஐரோப்பிய ஒன்றிய எம்.பி.க்கள் குழு இரண்டு நாட்கள் ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News