செய்திகள்
அயோத்தி நிலம்

அயோத்தி விவகாரங்களை கவனிக்க 3 அதிகாரிகள் குழு - உள்துறை அமைச்சகம் நியமித்தது

Published On 2020-01-03 21:29 GMT   |   Update On 2020-01-03 21:29 GMT
அயோத்தி விவகாரங்களை கவனிக்க 3 அதிகாரிகளை நியமித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு சாதகமான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி வழங்கியது. சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும், ராமர் கோவில் கட்டுவதற்காக ஒரு அறக்கட்டளையை அமைக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி உத்தரபிரதேச மாநில அரசு அயோத்தியில் உள்ள 3 மனைகளில் ஒரு மனையை அந்த மாநில சன்னி வக்பு வாரியத்துக்கு வழங்குவதற்கான பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளது.

அயோத்தி பிரச்சினை தொடர்பாக பல்வேறு பரிந்துரைகள், ஆலோசனைகள் வருவதால் உள்துறை அமைச்சகம் இதனை கவனிப்பதற்காக ஒரு அதிகாரிகள் குழுவை நியமித்துள்ளது.

அயோத்தி விவகாரங்கள், அதுதொடர்பான கோர்ட்டு தீர்ப்புகள் ஆகியவற்றை கவனிக்க கூடுதல் செயலாளர் ஜியானேஷ் குமார் தலைமையில் 3 அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். இதுதொடர்பான அனைத்து விவகாரங்களையும் இனி அவர்களே கவனிப்பார்கள் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஜியானேஷ் குமார் ஏற்கனவே காஷ்மீர், லடாக் விவகாரங்களை கவனிக்கும் அதிகாரிகள் குழுவின் தலைவராகவும் உள்ளார். மத்திய அரசின் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கையில் அவர் முக்கிய அதிகாரியாக இருந்தவர்.

ஏற்கனவே 1990 மற்றும் 2000-ம் ஆண்டுகளில் உள்துறை அமைச்சகத்தில் ‘அயோத்தி தனிப்பிரிவு’ ஒன்று இயங்கியது. அயோத்தி பிரச்சினை தொடர்பாக லிபெரான் கமிஷன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ததும் அது கலைக்கப்பட்டது.

அதேபோல உள்நாட்டு பாதுகாப்புக்கு என்று 2 பிரிவுகள் இருந்தது ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. அதற்கு இணை செயலாளர் (பெண்கள் பாதுகாப்பு) புனியா சாலிலா ஸ்ரீவத்சவா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News