செய்திகள்
பிரக்யா தாகூருக்கு எதிராக முழக்கமிட்ட மாணவர்கள்

பல்கலைக்கழகம் சென்ற பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூருக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு

Published On 2019-12-26 08:38 GMT   |   Update On 2019-12-26 08:38 GMT
போபால் தேசிய பல்கலைக்கழகத்திற்கு சென்ற பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூரை திரும்பி போகும்படி மாணவர்கள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
போபால்:

சர்ச்சைக்குரிய கருத்துக்களால் அதிகம் அறியப்படுபவர் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர். கடந்த சனிக்கிழமை டெல்லியில் இருந்து போபால் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில், இருக்கை மாற்றப்பட்டது தொடர்பாக பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளுடன் பிரக்யா சிங் தாகூர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சமூக வலைத்தளங்களில் பரவின.  

இந்த நிலையில், தனது சொந்த தொகுதியான போபாலில் போராட்டத்தில் ஈடுபட்ட மகன்லால் சதுர்வேதி தேசிய பல்கலைக்கழக மாணவிகளை சந்திக்கச் சென்ற பிரக்யா சிங் தாகூருக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. 

பத்திரிக்கை மற்றும் தொலைத்தொடர்பு துறை பிரிவைச்  சேர்ந்த 2 மாணவிகள், போதிய வருகைப்பதிவு இல்லாததால்  பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் இருவரும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இவர்களை சந்திப்பதற்காக பிரக்யா சிங் தாகூர், போராட்டம் நடைபெற்ற பல்கலைக்கழக வளாகத்திற்கு சென்றார். அப்போது, மாணவர்கள் சிலர் திரண்டு வந்து, பிரக்யா சிங் தாகூரை பார்த்து “பயங்கரவாதியே திரும்பி போ” என முழக்கமிட்டனர். இதற்கு, பிரக்யா சிங் தாகூருடன் வந்த பாஜக ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பதில் கோஷம் எழுப்பினர்.  

இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், நிலைமையை சீராக்கினர். 

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பிரக்யா சிங் தாகூர், “இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு தொடர்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறேன்” என்றார். 
Tags:    

Similar News