செய்திகள்
நிர்பயா குற்றவாளிகள்

நிர்பயா குற்றவாளிகள் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்ய 7 நாள் கெடு

Published On 2019-12-18 17:21 GMT   |   Update On 2019-12-18 17:21 GMT
நிர்பயா பாலியல் குற்றவாளிகள் தங்கள் கருணை மனுக்களை குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்ய 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக திகார் சிறைத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் (நிர்பயா) ஓடும் பஸ்சில் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். 

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளி சிறுவன் என்பதால் அவனுக்கு மூன்று ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்க உத்தரவிட்டது. மீதம் இருந்த 5 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

ஆனால், மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் டெல்லி திகார் சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டார்.

மேலும், மீதமுள்ள 4 பேரில் 3 பேர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதற்கிடையில், 4-வது குற்றவாளியான அக்சய் குமார் சிங் சமீபத்த்தில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. 



இரு தரப்பு வாதங்களையும் கேட்ட 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அக்சய் குமார் சிங்கின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் குடியரசு தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்து தங்கள் தூக்கு தண்டனையை குறைத்துக்கொள்ளலாம் என்ற ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே குற்றவாளிகளுக்கு எஞ்சியுள்ளது. 

இந்நிலையில், நிர்யயா பாலியல் குற்றவாளிகள்  குடியரசுத்தலைவரிடம் தங்கள் கருணை மனுக்களை தாக்கல் செய்ய 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக திகார் சிறைத்துறை இயக்குனர் சந்தீப் கோயல் தெரிவித்துள்ளார். 

இந்த நாட்களுக்குள் குற்றவாளிகள் குடியரசுத்தலைவரிடம் குற்றவாளிகள் கருணை மனுக்களை தாக்கல் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணை மனுக்களை தள்ளுபடி செய்யும் பட்சத்தில் விரைவாக நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News