செய்திகள்
உன்னாவ் இளம்பெண்ணின் இறுதி ஊர்வலம்

எரித்துக் கொல்லப்பட்ட உன்னாவ் இளம்பெண் உடல் அடக்கம் செய்யப்பட்டது

Published On 2019-12-08 10:10 GMT   |   Update On 2019-12-08 10:10 GMT
உத்தர பிரதேசம் மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் கற்பழித்தவர்களால் தீயிட்டு எரித்துக் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் அவரது கிராமத்தில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி என்ற 2 பேர் கடத்திச் சென்று இந்த பாதக செயலில் ஈடுபட்டனர். இருப்பினும், கடந்த மார்ச் மாதம்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த வியாழக்கிழமை காலை அந்த இளம்பெண் தனது வீட்டில் இருந்து ரேபரேலி கோர்ட்டுக்கு புறப்பட்டார்.

கோர்ட்டுக்கு செல்லும் வழியில், சிவம் திரிபாதி, சுபம் திரிபாதி உள்பட 5 பேர் சேர்ந்து அப்பெண்ணைதீ வைத்து எரித்தனர். 90 சதவீத தீக்காயங்களுடன் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண், வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். அவரை தீ வைத்து எரித்த 5 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.



இறந்த பெண்ணின் உடல் டெல்லியில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உன்னாவ் மாவட்டத்துக்கு நேற்றிரவு கொண்டு வரப்பட்டது.

சமீபத்தில் ஐதராபாத்திலும் நடந்த இதுபோன்ற சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கற்பழித்து எரிக்கப்பட்ட உன்னாவ்  இளம்பெண்ணின் சகோதரி, ‘உ.பி.முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் எங்களை வந்து பார்க்கும் வரை உடலை அடக்கம் செய்ய மாட்டோம்’ என கூறியிருந்தார்.

அவரை உன்னாவ் மாஜிஸ்திரேட் சந்தித்து சமாதானப்படுத்தினார். அவர்கள் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். வீடு கட்டித் தரப்படும் என உ.பி.மாநில அரசு அறிவித்தது.

இந்நிலையில், அந்த இளம்பெண்ணின் உடல் அவர் பிறந்த கிராமத்தில் உள்ள இடுகாட்டில் தாத்தா, பாட்டி கல்லறைகளுக்கு அருகாமையில் இன்று பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச்சடங்குகள் மற்றும் உடல் அடக்கத்தின்போது ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Tags:    

Similar News