செய்திகள்
என்கவுண்டர் செய்யப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார்

சட்டம் தன் கடமையை செய்துள்ளது: ஐதராபாத் என்கவுண்டர் குறித்து போலீஸ் கமிஷனர் பேச்சு

Published On 2019-12-06 11:11 GMT   |   Update On 2019-12-06 11:11 GMT
ஐதராபாத் பெண் டாக்டர் கற்பழிப்பு குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து பேசிய போலீஸ் கமிஷனர் சட்டம் தன் கடமையை செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சாம்ஷாபாத் பகுதியை சேர்ந்த பெண் கால்நடை டாக்டர் கடந்த 27-ம் தேதி 4 நபர்களால் கற்பழித்து எரித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், பெண் டாக்டரை கற்பழித்து கொலை செய்த 4 பேரை போலீசார் கடந்த 29-ம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

அவர்கள் அனைவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்கவும், அதில் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

இதையடுத்து, குற்றவாளிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.  விசாரணை தொடர்பாக இன்று அதிகாலை 3 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரையும் பெண் டாக்டரை எரித்துக் கொன்ற ஐதராபாத்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அழைத்து சென்றனர்.

கொலை நடந்த பாலத்தின் அருகே சென்றபோது அவர்கள் எப்படி கொலை செய்தார்கள் என்பதை நடித்து காட்டினார்கள். அப்போது 4 பேரும் திடீரென போலீசாரின் ஆயுதங்களை பறித்தும், கற்களால் தாக்கியும் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் குற்றவாளிகள் 4 பேரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.



இந்த எண்கவுண்டர் குறித்து சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

இன்று அதிகாலை குற்றவாளிகள் நான்கு பேரையும் விசாரணைக்காக குற்றம் நடைபெற்ற இடத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். 

அங்கு குற்றவாளிகள் மறைத்து வைத்திருந்த உயிரிழந்த பெண் டாக்டரின் செல்போன் கைப்பற்றப்பட்டது. அப்போது குற்றாவாளிகள் போலீசார் மீது கட்டைகளை தூக்கி எறிந்தனர். மேலும், போலீசாரிடம் இருந்த இரண்டு துப்பாக்கிகளை திடீரென பறித்துக் கொண்டனர். 

குற்றாவாளிகளை சரண் அடையும்படி எச்சரித்தோம். ஆனால், ஆரிப் என்ற ஒரு குற்றவாளி போலீசார் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கினான். 

இந்த தாக்குதலில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட இரண்டு போலீசார் காயமடைந்தனர். ஆகவே தங்களை தற்காத்துக் கொள்ளவே குற்றாவாளிகள் நோக்கி பதில் தாக்குதல் நடத்தினர். 

இந்த என்கவுண்டரில் குற்றாவாளிகள் 4 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். நான் ஒன்றே ஒன்று மட்டும் கூறிக்கொள்கிறேன். சட்டம் தன் கடமையை செய்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News