செய்திகள்
கோப்பு படம்

சிறைவைக்கப்பட்டதாக பெற்றோர் புகார் - நித்யானந்தா ஆசிரமத்தில் 4 சிறுவர்-சிறுமிகள் மீட்பு

Published On 2019-11-28 09:37 GMT   |   Update On 2019-11-28 09:37 GMT
நித்யானந்தா ஆசிரமத்தில் 4 சிறுவர்-சிறுமிகள் சிறைவைக்கப்பட்டதாக பெற்றோர் புகார் கூறியதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு குஜராத் ஐகோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
அகமதாபாத்:

பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மாவின் 4 மகள்களை பிடதியில் உள்ள சாமியார் நித்தியானந்தா வின்கல்வி நிலையத்தில் சேர்த்திருந்தார்.

திடீரென 4 பேரையும் குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே கிராபூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு மாற்றி உள்ளனர். மகள்களை பார்க்க ஜனார்த்தன சர்மா அகமதாபாத் ஆசிரமத்திற்கு சென்றபோது அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.

இதுகுறித்து அவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ஆசிரமத்தில் சோதனை நடத்தி ஜனார்த்தன சர்மாவின் 2 மகள்களை மீட்டனர். மேலும் 2 மகள்களை மீட்டுதரக்கோரி குஜராத் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்துள்ளார்.

மீட்கப்பட்ட 2 குழந்தைகளிடம் விசாரணை நடத்திய போலீசார் நித்யானந்தா மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர். இந்த நிலையில் நித்யானந்தா ஆசிரமத்தில் தங்களது 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் என 4 குழந்தைகள் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்டுத்தரக்கோரி மற்றொரு பெற்றோர் குஜராத் ஐகோர்ட்டில் ஆட் கொணர்வு மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நேற்று பிற்பகல் நீதிபதி பிரம்பட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரமத்தில் இருக்கும் 4 சிறுவர்-சிறுமிகளையும் உடனடியாக மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து உடனடியாக ஆசிரமத்திற்கு சென்ற போலீசார் 4 சிறுவர், சிறுமிகளையும் மீட்டு மாலையில் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது குழந்தைகள் 4 பேரும், தங்களுக்கு ஆசிரமத்தில் தங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்தனர்.

பின்னர் குழந்தைகளை அவர்களது பெற்றோர் சந்திப்பதற்கு போலீசார் அனுமதிக்கவேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, போலீஸ் விசாரணைக்கு பெற்றோர் எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என்று கூறினார். இந்த மனுக்கள் மீதான இறுதி உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட உள்ளது.
Tags:    

Similar News