செய்திகள்
கைது செய்யப்பட்ட கங்கோ தாஸ்

ஜார்கண்டில் கொடூரம்: கர்ப்பிணி மனைவி, குழந்தைகள் உள்பட ஐந்து பேரை கொன்ற மனநோயாளி கைது

Published On 2019-11-27 10:51 GMT   |   Update On 2019-11-27 12:39 GMT
ஜார்கண்ட் மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் தனது தாய், மனைவி மற்றும் குழந்தைகள் உள்பட ஐந்து பேரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஞ்சி:

ஜார்கண்ட் மாநிலம், கோடர்மா மாவட்டம், ஹரிஜன் டோலா கிராமத்தை சேர்ந்தவர் கங்கோ தாஸ் (30). மனநலம் பாதிக்கப்பட்டவரான இவருக்கு சாந்தி(60) என்ற தாயும், ஷீலா தேவி(27) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மேலும், ஷீலா தேவி  8 மாதங்கள் கர்ப்பிணியாக இருந்துள்ளார்.  

இந்நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் தனது வீட்டிற்கு வந்த கங்கோ தாஸ் ஷீலா தேவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

அப்போது வீட்டில் இருந்த அவரது தாயார், மனைவி மற்றும் அங்கிருந்த உறவினரின் குழந்தைகள் கங்கோ தாசை சமாதானப்படுத்த முற்பட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் கங்கோ தாஸ் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதத்தால் தனது தாய், மனைவி மற்றும் 4 குழந்தைகள் அனைவரையும் கொடூரமாக தாக்கினார். 



இந்த தாக்குதலில் தாய், கர்ப்பிணி மனைவி, அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் உறவினரின் குழந்தை என 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒரு குழந்தை படுகாயமடைந்தது. 

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்தனர். படுகாயமடைந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 5 பேரை கொலை செய்து விட்டு வீட்டிற்குள் கதவை பூட்டிக்கொண்டு பதுங்கியிருந்த கங்கோ தாசை கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளர்.
Tags:    

Similar News