செய்திகள்
உத்தவ் தாக்கரே

முதல்-மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே

Published On 2019-11-27 07:28 GMT   |   Update On 2019-11-27 10:26 GMT
மராட்டிய மாநிலத்தின் முதல்-மந்திரியாக நான் பதவி ஏற்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மும்பை:

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஒருங்கிணைந்து மகாராஷ்டிரா முன்னேற்ற முன்னணி என்ற புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணி சார்பில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

உத்தவ் தாக்கரே தனது தந்தை பால்தாக்கரே வழியில் அரசியல் அதிகாரத்துக்குள் வராமல் பின்னணியில் இருக்கவே விரும்பினார். எனவே தான் அவர் சட்ட சபை தேர்தலில் நின்று எம்.எல்.ஏ. கூட ஆகவில்லை. தன்னை முன் நிறுத்துவதற்கு பதில் தனது மகன் ஆதித்யா தாக்கரேயை அவர் முன் நிறுத்தி வந்தார். ஆதித்யா தாக்கரேயை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது.

ஆனால் ஆதித்யா தாக்கரேக்கு 29 வயதே ஆவதால் அவரை முதல்-மந்திரியாக ஏற்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர். அதோடு உத்தவ்தாக்கரே முதல்-மந்திரி பதவியில் இருந்தால்தான் கூட்டணி உடையாமல் 5 ஆண்டுக்கு ஆட்சியை நடத்த முடியும் என்று சரத்பவாரும், சோனியாவும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.



எதிர்பாராதவிதமாக நடந்த இந்த அரசியல் சூழ்நிலை மாற்றங்களால் உத்தவ்தாக்கரே முதல்-மந்திரி பதவியை மறுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே நெகிழ்ச்சியுடன் முதல்வர் பதவியை ஏற்பதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

மராட்டிய மாநிலத்தின் முதல்-மந்திரியாக நான் பதவி ஏற்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்தது இல்லை. இதற்காக நான் சோனியாவுக்கும், சரத்பவாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

30 ஆண்டுகளாக எங்களுடன் நண்பர்களாக இருந்தவர்கள் எங்களை புரிந்து கொள்ளவில்லை. ஆனால் 30 ஆண்டுகளாக நாங்கள் யாரை எதிரிகள் என்று எதிர்த்து அரசியல் செய்து வந்தோமோ அவர்கள் நண்பர்களாக மாறி இருக்கிறார்கள். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட நாங்கள் ஒன்றுபட்டு இருக்கிறோம்.

என் மீது காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் தலைவர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். பாரதிய ஜனதா கூட என் மீது இந்த அளவுக்கு நம்பிக்கை வைத்தது இல்லை. அவர்கள் என்னுடன் வெறுப்பு அரசியல்தான் நடத்தினார்கள்.

தேவை ஏற்படும்போது மட்டும்தான் பாரதிய ஜனதா என்னை பயன்படுத்திக் கொண்டது. மற்ற நேரங்களில் என்னை அவர்கள் கண்டு கொண்டதே இல்லை. எங்களது நட்பையும், தேவையையும் அவர்கள் எப்போதுமே உதாசீதனம் தான் செய்து வந்தார்கள்.

எனது தலைமையிலான அரசு இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு முன்னுதாரணமான அரசாக அமையும். நான் தனிப்பட்ட முறையில் யார் மீதும் பழிவாங்கும் உணர்ச்சியுடன் நடந்து கொள்ள மாட்டேன். எனது அரசும் அப்படி செயல்படாது. எனது ஆட்சி சுமூகமாக நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த புதிய கூட்டணியை மராட்டிய மாநில மக்களும் ஏற்றுக் கொண்டு ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.

உத்தவ் தாக்கரே அடுத்த 6 மாதத்துக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக வேண்டும். அவர் எம்.எல்.ஏ. ஆவதற்காக சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் யாராவது ஒருவர் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு உத்தவ் தாக்கரே தேர்தலை சந்திப்பார். அவர் சந்திக்க போகும் முதல் தேர்தல் அதுதான். இதனால் உத்தவ் தாக்கரே எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News