செய்திகள்
மத்திய அரசு

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி

Published On 2019-11-27 02:32 GMT   |   Update On 2019-11-27 02:32 GMT
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது சொத்து விவர அறிக்கையை உரிய கால கட்டத்திற்குள் தாக்கல் செய்யாவிட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
புதுடெல்லி :

நாடு முழுவதும் 6,699 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் தற்போது 5,205 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் உரிய படிவத்தில் தங்கள் சொத்து விவரம் குறித்த வருடாந்திர அறிக்கையை உரிய படிவத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

அவர்களுக்கு பரம்பரை வழியாக வந்த அசையா சொத்து, சொந்தமாக வாங்கிய அசையா சொத்து, குத்தகை அல்லது அடமானத்தில் வந்துள்ள அசையா சொத்து (தனது பெயரில் அல்லது குடும்ப உறுப்பினர் அல்லது மற்றவர்களின் பெயரில் இருந்தாலும்) பற்றிய விவரங்களை சொத்து விவர அறிக்கையில் தெரிவிக்க வேண்டும். இதை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 31-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது நடைமுறை ஆகும்.

ஆனால் பலரும் தங்கள் சொத்து விவர அறிக்கையை உரிய கால கட்டத்திற்குள் தாக்கல் செய்வது இல்லை. இதையடுத்து மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.



சட்டப்படி தங்களது சொத்து விவர அறிக்கையை உரிய கால கட்டத்திற்குள் தெரிவிக்காத ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பணியாளர் நலன்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது அசையா சொத்து விவர அறிக்கை தாக்கல் செய்வதை எளிமைப்படுத்தும் விதத்தில் இணையதள வழி தாக்கல் முறையை மத்திய பணியாளர் நலன்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.

இணையதளம் வழியாக 2019-ம் ஆண்டுக்கான சொத்து விவர அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31-ந்தேதி ஆகும். அந்த நாளுக்கு பின்னர் இணையதள தாக்கலுக்கான வழி மூடப்பட்டு விடும்.

இதையொட்டி மத்திய அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர்கள், மாநில அரசுகளின் தலைமைச்செயலாளர்களுக்கு மத்திய பணியாளர் நலன்துறை அமைச்சகம் ஒரு கடிதம் எழுதி உள்ளது.

அதில் உங்கள் துறையில், மாநிலத்தில் பணியாற்றி வருகிற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2019, டிசம்பர் 31-ந்தேதியுடன் முடிகிற ஓராண்டுக்கான சொத்து விவரங்களை உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்துங்கள் என கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News