செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்

அரசியலமைப்பு முறையில் கவர்னர்களின் பங்களிப்பு முக்கியத்துவமானது - ஜனாதிபதி பேச்சு

Published On 2019-11-23 12:01 GMT   |   Update On 2019-11-23 12:01 GMT
நாட்டின் அரசியலமைப்பு சட்டம்சார்ந்த முறையில் கவர்னர்களின் பங்களிப்பு முக்கியத்துவமானது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதுடெல்லி:

அனைத்து மாநிலங்களின் கவர்னர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான துணைநிலை கவர்னர்கள் பங்கேற்கும் மாநாடு ஆண்டுதோறும் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அவ்வகையில், இந்த ஆண்டின் மாநாட்டை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தொடங்கிவைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டில் உள்ள மலைவாழ் மக்களின் முன்னேற்றமும் அவர்களுக்கான அதிகாரமளித்தலும் நமது உள்நாட்டுப் பாதுகாப்பு போன்று ஒன்றிணைந்திருக்க வேண்டும். தங்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இத்தகைய மக்களின் முன்னேற்றத்துக்காக சரியான வழிகாட்டுதலை கவர்னர்கள் வழங்கலாம்.

கூட்டுறவான கூட்டாட்சி முறையிலும் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை கொண்ட  கூட்டாட்சி முறையிலும் நாட்டின் முன்னேற்றத்துக்காக கவர்னர்கள் ஆற்றும் பங்கு மிகவும் முக்கியத்துவமானது.

எல்லா கவர்னர்களுக்கும் பொதுவாழ்வில் ஏராளமான அனுபவம் உண்டு. இந்த அனுபவங்களின் மூலமாக மக்களுக்கான அதிகபட்ச ஆதாயம் சென்றடைய வேண்டும். நாம் அனைவருமே மக்களுக்காக பணியாற்றுகிறோம். மக்களுக்கு பதிலளிக்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.



அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது, பராமரிப்பது என்ற எல்லைகளுக்குள் கவர்னர்களின் பங்களிப்பு இருந்து விடாமல் தங்களின் மாநில மக்களுக்கான சேவை மற்றும் நல்வாழ்விலும் அவர்களின் பணிகள் அமைய வேண்டும்.

ஞானத்துடன் கூடிய உயர்சக்தியான நாடாக இந்தியாவை உருவாக்குவதே  நமது அரசின் புதிய கல்விக் கொள்கையின் இலக்காகும். இந்த இலக்கினை செயலாக்குவதற்கு போதுமான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான முன்னெடுப்புகளின்மீது நமது உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அக்கறை செலுத்த வேண்டும்.

எதிர்கால தலைமுறையினர் அறிவிலும் திறன்களிலும் சிறந்தோங்குவதற்கு சரியான வழிகாட்டுதலை பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் என்ற வகையில் கவர்னர்கள் அளித்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News