செய்திகள்
மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார்.

ஒரே இரவில் மாறிய மகாராஷ்டிர அரசியல் களம்: புதிய முதல்வர், துணை முதல்வர் சொல்வது என்ன?

Published On 2019-11-23 03:53 GMT   |   Update On 2019-11-23 03:53 GMT
மகாராஷ்டிரா அரசியல் சூழல் ஒரே இரவில் மாறி, புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. நிலையான அரசு அமைவதற்காக கூட்டணி அமைத்திருப்பதாக புதிய முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் கூறியுள்ளனர்.
மும்பை:

மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக, பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றுள்ளது. முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவாரும் பதவியேற்றுள்ளனர். இதனால் கடந்த 10 நாட்களாக அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்தது.

சிவசேனா தலைமையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை முதல்-மந்திரியாக ஏற்க கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று இரவு தெரிவித்திருந்தார். ஆனால், ஒரே இரவில் நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது.

மீண்டும் முதல்வராக பதவியேற்ற பின் பட்னாவிஸ் கூறும்போது, ‘மக்கள் எங்களுக்கு ஒரு தெளிவான தீர்ப்பினை வழங்கியிருந்தனர். ஆனால், தேர்தலுக்கு பிறகு சிவசேனா பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சித்தது. அதன் விளைவாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மகாராஷ்டிராவுக்கு நிலையான அரசு தேவை, கிச்சடி அரசு தேவையில்லை’ என்றார்.

அஜித் பவார் கூறுகையில், ‘தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதல் இன்று வரை எந்தவொரு கட்சியாலும் அரசாங்கத்தை உருவாக்க முடியவில்லை. மகாராஷ்டிரா மாநிலம் விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறது. நிலையான அரசு அமைந்தால்தான், இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். எனவே நாங்கள் ஒரு நிலையான அரசாங்கத்தை உருவாக்க முடிவு செய்து, பாஜகவுடன் இணைந்துள்ளோம்’ என்றார்.
Tags:    

Similar News