செய்திகள்
மாதிரி படம்

தூய்மையான குடிநீர்: மும்பைக்கு முதலிடம் - சென்னை, கொல்கத்தா படுமோசம்

Published On 2019-11-16 13:51 GMT   |   Update On 2019-11-16 13:51 GMT
இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் அரசு வழங்கும் குடிநீரின் தரம் தொடர்பான ஆய்வறிக்கையில் மும்பை முதலிடத்தில் உள்ளது. டெல்லி, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்கள் கடைசி இடத்தைப்பெற்றன.
புதுடெல்லி:

மத்திய நுகர்வோர் துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட இந்திய தரக்கட்டுப்பாட்டு முகமை சமீபத்தில் இந்தியாவில் உள்ள 17 மாநிலங்களின் தலைநகரங்களில் அரசால் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்துக்கான பரிசோதனைகளை நடத்தியது.

தண்ணீரில் கலந்திருக்கும் தனிமங்கள், ரசாயனம், கிருமிகள், துர்வாடை உள்ளிட்ட 11 வகையான தரக்கட்டுப்பாடுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த பரிசோதனைகளில் மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் வழங்கப்படும் குடிநீர் வேறு எந்த மறுசுழற்சியும் செய்து குடிக்க வேண்டிய அவசியமில்லாத தூய்மையான குடிநீர் என கண்டறியப்பட்டுள்ளது. 

இங்கு 10 இடங்களில் பெறப்பட்ட குடிநீரின் மாதிரிகளும் ஒரே அளவில் தூய்மையாக இருப்பதாக கண்டறியப்பட்டது.

இதற்கு நேர்மாறாக, நாட்டின் தலைநகரான டெல்லி, தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள குடிநீர் நிர்ணயிக்கப்பட்ட 11 வகையான சோதனைகளில் பலவற்றில் தேர்ச்சி பெறவில்லை.



ஐதராபாத், புவனேஸ்வர், ராஞ்சி, ராய்ப்பூர், அமராவதி, சிம்லா ஆகிய நகரங்களில் எடுக்கப்பட்ட குடிநீரின் மாதிரிகளில் அவை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தரக்கட்டுப்பாடுகளுக்கு பொருந்தாமல் இருந்ததால் குடிப்பதற்கு உகந்தது அல்ல என தீர்மானிக்கப்பட்டது.

இதேபோல், சண்டிகர், கவுகாத்தி, பெங்களூரு, காந்திநகர், லக்னோ, ஜம்மு, ஜெய்ப்பூர், டேராடூன், சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களின் குடிநீர் மாதிரிகளும் திருப்திகரமாக இல்லை.

குறிப்பாக, சென்னையில் 10 இடங்களில் எடுக்கப்பட்ட குடிநீரின் மாதிரிகளில் 11-ல் 9 அம்சங்கள் தரக்கட்டுப்பாடுகளை மீறிய வகையில் இருந்துள்ளது. 

இந்த ஆய்வறிக்கையின் இரண்டாம் பகுதியை டெல்லியில் இன்று வெளியிட்ட மத்திய உணவுப்பொருள் வினியோகம் மற்றும் நுகர்வோர் நலத்துறை மந்திரி ராம் விலாஸ் பாஸ்வான், நாடு தழுவிய அளவில் குடிநீருக்கான சரியான தரநிர்ணயம்  உருவாக்கப்பட வேண்டும். இதுதொடர்பான கட்டுப்பாடுகளை உருவாக்கிய பின்னர் நம்மால் நடவடிக்கை எடுக்க முடியும் என குறிப்பிட்டார்.
Tags:    

Similar News