செய்திகள்
காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி, அவர்களுக்கு இனிப்பு வழங்கிய காட்சி.

காஷ்மீரில் ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடினார் பிரதமர் மோடி

Published On 2019-10-28 21:46 GMT   |   Update On 2019-10-28 21:46 GMT
காஷ்மீரில், ராணுவத்தினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார். அவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
ஜம்மு:

பிரதமர் மோடி, 2014-ம் ஆண்டு பதவி ஏற்றதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடி வருகிறார்.

இந்த ஆண்டு தீபாவளியை அவர் காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையோரத்தில் அமைந்துள்ள ரஜவுரி மாவட்டத்தில் ராணுவத்தினருடன் கொண்டாடினார். இதற்காக நேற்று முன்தினம் ராணுவ தளபதி பிபின் ரவத்துடன் அவர் ரஜவுரியில் உள்ள ராணுவ படைப்பிரிவு தலைமையகத்துக்கு சென்றார்.

அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுடன் அவர் தீபாவளி கொண்டாடினார். அப்போது அவர் ராணுவ உடை அணிந்திருந்தார். ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பணியில் உள்ள வீரர்களுடன் உரையாடினார்.

அவர்களிடையே பேசுகையில், “ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட விரும்புவார்கள். அதுபோல், நானும் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட இங்கு வந்துள்ளேன். துணிச்சலான ராணுவ வீரர்கள்தான் எனது குடும்பம்.

உங்களின் துணிச்சலால்தான், இதுவரை ‘முடியாது’ என கருதப்பட்ட முடிவுகளை எல்லாம் மத்திய அரசால் எடுக்க முடிந்தது. தேசத்தை பாதுகாப்பதில் நீங்கள் காட்டும் வீரம் பாராட்டத்தக்கது. அதற்காக நாட்டு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ராணுவ வீரர்களின் தியாகத்தை எடுத்துக்காட்ட டெல்லியில் தேசிய போர்வீரர் நினைவுச்சின்னம் திறக்கப்பட்டுள்ளது. அதற்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை வைத்து, ராணுவம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை உணர்ந்து கொள்ளலாம்” என்று கூறினார்.

ரஜவுரியில் உள்ள ‘ஹால் ஆப் பேம்’ என்ற கட்டிடத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். உயிர்த்தியாகம் செய்த வீரர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவை போற்றும் வகையில் அவர் அஞ்சலி செலுத்தினார்.

ரஜவுரியில் இருந்து திரும்பும் வழியில், பதன்கோட் விமானப்படை நிலையத்தில் விமானப்படையினர் மற்றும் ராணுவ வீரர்களுடன் அவர் உரையாடினார்.

பின்னர், பிரதமர் மோடி, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடியது தொடர்பான செய்தியையும், வீடியோவையும் வெளியிட்டார். அதில், ராணுவ வீரர்கள் ‘பாரத் மாதா கீ ஜே’ என்று முழக்கமிடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

பிரதமரின் திடீர் வருகையால் மிகவும் பெருமைப்படுவதாக ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News