செய்திகள்
சித்தரிப்பு படம்

மசூதிக்குள் இஸ்லாமிய பெண்கள் செல்ல அனுமதி கேட்டு வழக்கு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Published On 2019-10-25 09:37 GMT   |   Update On 2019-10-25 09:37 GMT
மசூதிகளுக்குள் இஸ்லாமிய பெண்களும் சென்று தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கில் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி:

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரை சேர்ந்த ஒரு இஸ்லாமிய தம்பதியர் இஸ்லாமிய பெண்களும் மசூதிகளுக்குள் சென்று தொழுகை நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர்.

மத்திய-மாநில அரசின் நிதியுதவி மற்றும் சில சலுகைகளுடன் இயங்கிவரும் மசூதிகளில் பாலின பாகுபாட்டை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள சமத்துவத்துக்கு எதிரானது என தங்களது மனுவில் அவர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர்.



இதே கோரிக்கையுடன் யாஸ்மீன் சுபேர் அஹமத் பீர்சாடே என்பவரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மசூதிக்குள் பெண்களை அனுமதிக்குமாறு அரசு அதிகாரிகளுக்கும் வக்பு வாரியங்களுக்கும் உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடனான இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.பாப்டே, எஸ்.ஏ.நசீர் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News