search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்லாமிய பெண்கள்"

    இஸ்லாமிய பெண்களும் மசூதிகளுக்குள் சென்று தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கில் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #SCissuesnotice #Muslimwomen #mosqueentry
    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரை சேர்ந்த ஒரு இஸ்லாமிய தம்பதியர் இஸ்லாமிய பெண்களும் மசூதிகளுக்குள் சென்று தொழுகை நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    மத்திய-மாநில அரசின் நிதியுதவி மற்றும் சில சலுகைகளுடன் இயங்கிவரும் மசூதிகளில் பாலின பாகுபாட்டை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள சமத்துவத்துக்கு எதிரானது என தங்களது மனுவில் அவர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மசூதிகளுக்குள் பெண்கள் வழிபாடு செய்ய கூடாது என்று விதிக்கப்பட்டுள்ள தடையால் பெண்களின் சமஉரிமையும், கண்ணியமும் கேள்விக்குள்ளாவதாக குறிப்பிட்டார்.

    அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு ‘அரசியலமைப்பு சட்டம் 14-வது பிரிவின்படி ஒரு நாட்டிடம் கோர வேண்டிய உரிமையை தனிநபர்கள் (மசூதி நிர்வாகம்) மீது திணிக்க முடியுமா?, வேறு எந்த நாட்டிலாவது இஸ்லாமிய பெண்கள் மசூதிகளுக்குள் தொழுகை நடத்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளதா?  என்று கேள்வி எழுப்பினர்.



    இதற்கு பதிலளித்த மனுதாரரின் வழக்கறிஞர் மெக்காவில் உள்ள பெரிய மசூதி மற்றும் கனடா நாட்டில் உள்ள பல மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி உண்டு என தெரிவித்தார்.

    இதனையடுத்து, மனுதாரர்களின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு? என்ன என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    முன்னர் சபரிமலை தீர்ப்பு விவகாரம்போல் இந்த வழக்கின் தீர்ப்பும் ஆகிவிடாமல் இருப்பதற்காகவே மத்திய அரசிடம் முன்கூட்டியே விளக்கம் கேட்கப்படுவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

    (சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களும் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என முன்னர் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விளக்கம் கேட்டிருந்தது.

    அதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர் கோர்ட் எடுக்கும் முடிவுக்கு அரசு கட்டுப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என 5 நீதிபதிகளை கொண்ட அமர்வில் 4 நீதிபதிகள் ஆதரவாக தீர்ப்பளித்திருந்தனர். ஒரு நீதிபதி மட்டும் எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.

    ஆனால், பெரும்பான்மையான நீதிபதிகளின் கருத்தின் அடிப்படையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களும் வழிபாடு செய்யலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வெளியானது.

    பின்னர், மத்தியில் ஆளும் பாஜகவை சேர்ந்த பலர் இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவற்றை நடத்தினர். மேலும், இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்கள் இருமுடியுடன் வந்த பல பெண்களை மிரட்டி, திருப்பி அனுப்பி விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.)

    இப்படி, சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு மதிப்பில்லாமல் போனதை இன்று சூசகமாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ‘முன்னர் சபரிமலை தீர்ப்பு விவகாரம்போல் இந்த வழக்கின் தீர்ப்பும் ஆகிவிடாமல் இருப்பதற்காகவே மத்திய அரசிடம் முன்கூட்டியே விளக்கம் கேட்கப்படுவதாக’ தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #SCissuesnotice #Muslimwomen #mosqueentry 
    ×