செய்திகள்
கோப்புப்படம்

18வது நாளாக ஸ்டிரைக் நீடிப்பு: பஸ் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது- தெலுங்கானா அரசு அறிவிப்பு

Published On 2019-10-22 08:31 GMT   |   Update On 2019-10-22 08:31 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 18-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பஸ் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று ஐகோர்ட்டில் தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்பள உயர்வு, போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைத்து தங்களை அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டும், ஓய்வு ஊதியத்தை உயர்த்த வேண்டும் உள்பட 26 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5-ந்தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் காலக்கெடு விதித்து எச்சரிக்கை விடுத்தார். இந்த காலக்கெடுபுக்குள் பணிக்கு திரும்பாத 48 ஆயிரம் பஸ் ஊழியர்களை தாங்களாகவே பதவி விலகியதாக அரசு எடுத்துக்கொள்ளும் என முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடியாக அறிவித்தார். எனினும் ஊழியர்கள் பணிக்கு திரும்பாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தற்காலிக ஊழியர்கள், மாற்று நபர்களை வைத்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து பஸ் ஊழியர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. தினமும் பணிமனை முன்பு போராட்டம், மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் 2 ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

இன்று 18-வது நாளாக பஸ் ஊழியர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. 48 ஆயிரம் ஊழியர்கள் நீக்கத்தை எதிர்த்து ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊழியர்களுக்கான செப்டம்பர் மாத சம்பளத்தை வழங்க மாநில போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிடக்கோரி இரு ஊழியர்களின் சங்கங்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனு நீதிபதி அபினந்குமார் ‌ஷவிலி முன்பு விசாரணைக்கு வந்தது.

இதில் மாநில சாலை போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் சுனில்சர்மா பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில், “ஊழியர்களின் போராட்டத்தால் மாநில போக்குவரத்து கழகத்துக்கு வருவாய் பாதிக்கப்பட்டு உள்ளது. தசரா பண்டிகை காலத்தில் போராட்டம் நடத்தியதால் ரூ. 125 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நிதி நெருக்கடியால் சம்பளம் வழங்க முடியாத நிலை போக்குவரத்து கழகத்துக்கு ஏற்பட்டு இருக்கிறது. செப்டம்பர் மாதம் சம்பளத்துக்கு ரூ.239.68 கோடி தேவை. ஆனால் மாநில போக்குவரத்து கழகத்திடம் ரூ.7.48 கோடி மட்டுமே இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Tags:    

Similar News