செய்திகள்
இந்திய ரெயில்வே

ரெயில்வே அதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்க முடிவு - ரெயில்வே கோட்டங்களுக்கு இடமாற்றம்

Published On 2019-10-20 22:15 GMT   |   Update On 2019-10-20 22:15 GMT
ரெயில்வே வாரிய அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. அவர்கள் ரெயில்வே கோட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.
புதுடெல்லி:

ரெயில்வே வாரியத்தில் 200 அதிகாரிகள் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கையை குறைக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இவர்களில், இயக்குனர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட அந்தஸ்துள்ள அதிகாரிகள் 50 பேர் மண்டல ரெயில்வேக்களுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ரெயில்வே வாரியத்தில் அதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்க 2000-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலேயே திட்டமிடப்பட்டது. இப்போதுதான் அமல்படுத்தப்படுகிறது.

ரெயில்வே வாரியத்தில் எண்ணற்ற அதிகாரிகள் ஒரே மாதிரியான வேலையையே செய்கின்றனர். அதே சமயத்தில் மண்டல ரெயில்வேக்களின் செயல்திறனை அதிகரிக்க உயர் அதிகாரிகள் தேவைப்படுகின்றனர். எனவே, ரெயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தனது முன்னுரிமை பணியாக இத்திட்டத்தை நிறைவேற்ற உள்ளார்.

ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலின் 100 நாள் செயல்திட்டத்திலும் இது இடம் பெற்றுள்ளது. 2015-ம் ஆண்டு, விவேக் டெப்ராய் கமிட்டியின் பரிந்துரைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த நடவடிக்கை, ரெயில்வே அமைச்சகத்தை ஒட்டுமொத்தமாக மாற்றி அமைப்பதில் ஒரு தொடக்கம்தான். இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில், ரெயில்வே அமைச்சக உயர் அதிகாரிகளுடனான கூட்டத்தில், ரெயில்வே ஊழியர்கள் எண்ணிக்கையை ஆய்வு செய்யுமாறும், மிகுதியாக உள்ளவர்களை ரெயில்கள் இயக்கம் தொடர்பான பணிகளுக்கு பயன்படுத்துமாறும் பியூஸ் கோயல் கூறி இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News