செய்திகள்
இங்கிலாந்தில் மகாத்மா காந்தி மரம் நடும் காட்சி

30 ரீல்கள் அளவிலான மகாத்மா காந்தியின் அரிய ஆவணப்படம் கிடைத்தது

Published On 2019-09-27 15:03 GMT   |   Update On 2019-09-27 15:03 GMT
மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழக மக்கள் அவரது அஸ்திக்கு செலுத்திய இறுதி அஞ்சலி உள்பட 30 ரீல்கள் அளவிலான ஆவணப்படம் கிடைத்துள்ளது.
புனே:

மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் இயங்கிவரும் தேசிய திரைப்பட கருவூலத்தின் இயக்குநர் பிரகாஷ் மகடும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றில் அரிய நிகழ்வுகள் மற்றும் அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது தமிழக மக்கள் அவரது அஸ்திக்கு செலுத்திய இறுதி அஞ்சலி உள்பட 30 ரீல்கள் அளவிலான ஆவணப்படம் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வேளையில் இந்த படங்கள் நமக்கு கிடைத்துள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சியாகும் என தெரிவித்தார்.

வெளிநாடுகளில் முன்னர் இருந்த பிரசித்தி பெற்ற படத்தயாரிப்பு நிறுவனங்களான பாரமவுண்ட், பாத்தே, வார்னர், யூனிவர்சல், பிரிட்டிஷ் மூவிடோன் உள்ளிட்ட ஸ்டுடியோ ஒளிப்பதிவாளர்கள் மற்றும் பல்வேறு தனிநபர்களிடம் இருந்து இந்த அரிய ஆவணப்பட தொகுப்பு பெறப்பட்டுள்ளதாகவும் பிரகாஷ் மகடும் கூறினார்.



சுட்டுக் கொல்லப்பட்ட மகாத்மா காந்தியின் அஸ்தி (பழைய) மதராஸ் பட்டினத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரெயில் மூலம் கொண்டு செல்லப்பட்டபோது செட்டிநாடு, சிவகங்கை, சிதம்பரம், மானாமதுரை, ராமநாடு, புதுக்கோட்டை ஆகிய நிலையங்களில் கண்ணீர் மல்க மக்கள் அஸ்தி கலசத்தை வணங்கி வழிபாடு செய்த 30 நிமிட காட்சி இந்த தொகுப்பில் அடங்கியுள்ளது.

மேலும், மகாத்மா காந்தியின் இரண்டாம் மகன் மணிலால் காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சவர்க்கார் ஆகியோர் காந்தியுடன் தோன்றும் காட்சிகள், மகாராஷ்டிரா மாநிலத்தின் வர்தா பகுதியில் உள்ள சேவாகிராம் ஆசிரமத்தில் மனைவி கஸ்தூரிபாயுடன் காந்தி விவசாயப் பணிகள் செய்யும் காட்சி, ராஜாஜியுடன் மணப்பாறை ரயில் நிலையத்தில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி மற்றும் கும்பகோணம் கோவில்களுக்கு செல்லும் காட்சி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டில் அவர் சுற்றுப்பயணம் செய்தபோது அந்நாட்டு ஊடகங்கள் படம்பிடித்த காட்சிகள் ஆகியவையும் தற்போது கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News