செய்திகள்
டாக்டர் கபீல் கான்

கோரக்பூர் குழந்தைகள் பலியான விவகாரத்தில் டாக்டர் கபீல் கான் குற்றமற்றவர் -விசாரணை அறிக்கை தகவல்

Published On 2019-09-27 08:26 GMT   |   Update On 2019-09-27 08:26 GMT
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பலியான விவகாரத்தில் டாக்டர் கபீல் கான் குற்றமற்றவர் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் உயிரிழந்தன. இந்த விவகாரம் தொடர்பாக டாக்டர் கபீல் கான் கைது செய்யப்பட்டு, 9 மாதங்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் டாக்டர் கபீல் கான் மீதான புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு துறைரீதியான ஒரு குழு அமைக்கப்பட்டது.

அரசு சார்பில் அமைக்கப்பட்ட இந்த குழு நீண்ட விசாரணைக்குப் பிறகு தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், குழந்தைகள் உயிரிழந்ததற்கு டாக்டர் கபீல் கான் காரணம் அல்ல என்றும், அவர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து, குழந்தைகளை காப்பாற்ற பாடுபட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.



“டாக்டர் கபீல் கான் மருத்துவ அலட்சியமாக இருந்ததாகவோ, ஊழல் செய்ததாகவோ கூறப்படும் புகார்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. சம்பவம் நடந்த சமயத்தில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுவதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.

எனவே, டாக்டர் கபீல் கான் மீதான மருத்துவ அலட்சியம், ஊழல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News