search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்சிஜன் பற்றாக்குறை"

    சத்தீஸ்கர் மாநிலத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டபோது ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ராய்ப்பூர் :

    சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பல்புல் குடியம் எனும் 5 வயது சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அம்மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 22-ம் தேதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    ஆனால், சிகிச்சை பெற்று வந்த சிறுமியின் உடல் நலம் நேற்று மேலும் மோசமடைந்தது. இதனால், உயர் சிகிச்சைக்காக பிஜாப்பூரில் இருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள ஜக்தால்பூர் மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனைக்கு சிறுமியை இடம் மாற்றம் செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி ஜக்தால்பூருக்கு சிறுமி ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார், ஆனால் பாதி வழிலேயே ஆம்புலன்சில் இருந்த அக்சிஜன் சிலிண்டர் காலியானதால் சிறுமி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து பிஜாப்பூர் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பி.ஆர்.புஜாரி கூறுகையில், ஆம்புலன்சில் இருந்த சிலிண்டரில் விரைவாக ஆக்சிஜன் தீர்ந்து போனது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். ஆக்சிஜன் பற்றாக்குறையாக இருப்பதை கவணித்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர் முன்கூட்டியே தகவல் அளித்து இருந்தால் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் மாற்று ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் என தெரிவித்தார்.

    ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றி தகவல் அளித்தும் மாற்று ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்ய மருத்துவர்கள் மறுத்துவிட்டதாக சிறுமியின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

    சாதாரணமாக ஆம்புலன்சில் நோயாளிகளுடன் பயணம் செய்யும் உதவி மருத்துவர்கள் யாரும் சிறுமி அழைத்து செல்லப்பட்ட ஆம்புலன்சில் உடன் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    ×